2015-05-01 16:29:00

ஐரோப்பாவில் மூவரில் ஒருவருக்கு அஸ்பெஸ்டாஸ் தொடர்புடைய நோய்


மே,01,2015. ஐரோப்பாவில் மூன்று பேருக்கு ஒருவர் வீதம் அஸ்பெஸ்டாஸ் தொடர்புடைய நோயின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அஸ்பெஸ்டாஸ் தொடர்புடைய நோயை ஒழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் விண்ணப்பித்துள்ளது உயர்மட்ட கூட்டம் ஒன்று.

“ஐரோப்பாவில் சுற்றுச்சூழலும் நலவாழ்வும்” என்ற தலைப்பில் இஸ்ரேலின் ஹைப்பாவில் நடந்த கூட்டத்தில், ஐரோப்பாவில் வாழும் ஏறக்குறைய 90 கோடி மக்களுள் மூன்றில் ஒரு பகுதியினர், பணியிடங்களிலும், சுற்றுச்சூழலிலும் அஸ்பெஸ்டாஸ் தொடர்புடைய நோயின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று எச்சரிக்கப்பட்டது.  

ஐரோப்பாவில் அஸ்பெஸ்டாஸ் தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 15 ஆயிரம் பேர், குறிப்பாக தொழிலாளர்கள் உயிரிழப்பது ஐரோப்பாவுக்கு ஏற்றதல்ல என்று ஹைப்பா கூட்டத்தில் கூறினார் உலக நலவாழ்வு நிறுவனத்தின் ஐரோப்பியப் பிரிவு இயக்குனர் Zsuzsanna Jakab.

ஐரோப்பாவின் 53 உறுப்பு நாடுகளில் 37 நாடுகள் அஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டைத் தடை செய்துள்ளன. இன்னும் 16 நாடுகளில் அஸ்பெஸ்டாஸ் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன.

ஹைப்பாவில் இவ்வியாழனன்று நிறைவடைந்த மூன்று நாள் கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.