2015-05-01 16:25:00

15 செல்வந்த நாடுகளில் சிறார் உரிமைகள் கல்வி குறைவு


மே,01,2015. பதினைந்து தொழிற்வளர்ச்சியடைந்த நாடுகள், தங்களின் கல்வித் திட்டங்களில் சிறார் உரிமைகள் கல்வியை இணைப்பதற்குத் தவறியுள்ளன என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

“சிறார் உரிமைகள் குறித்த போதனையும், கற்றலும் : 26 நாடுகளில் அவை செயல்படுத்தப்படுதல்”என்ற தலைப்பில், ஐ.நா.வின் குழந்தை நல நிதி நிறுவனமான யூனிசெப் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த நாடுகளின் ஆசிரியர்கள் சிறார் உரிமைகள் குறித்து பயிற்சி பெறவில்லை மற்றும் சிறார் உரிமைகள் குறித்த அனைத்துலக ஒப்பந்தம் குறித்தும் அறிந்திருக்கவில்லை எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

26 தொழிற்வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறார் உரிமைகள் கல்வி குறித்து நடத்திய ஆய்வு பற்றிக் கூறும் இவ்வறிக்கை, சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தை இந்த 26 நாடுகளும் அமல்படுத்த வேண்டும் என்றும், இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளும், இக்கல்வி குறித்த பாடத்திட்டத்தை ஆசிரியர் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் சேர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

ஆஸ்ட்ரியா, பெல்ஜியம், கானடா, ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகியவை சிறார் உரிமைகள் குறித்த கல்வியை சில பள்ளிகளில் பாடத் திட்டத்தில் சேர்த்திருக்கின்றன, ஆனால், தேசிய அளவில் இது குறைபடுகின்றது என்றும் யூனிசெப்பின் புதிய அறிக்கை கூறுகின்றது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.