2015-04-30 16:10:00

திருத்தூதுப் பணிகள் குடும்பங்களில் ஆரம்பமாக வேண்டும்


ஏப்.30,2015. கிறிஸ்தவ வாழ்வுக் குழுமம் (CLC) மற்றும் மாணவ மறைபரப்புப்பணியின் படை (LMS) என்ற இரு குழுக்களைச் சேர்ந்த 5000த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து, வாழ்த்து கூறினார்.

"சுவர்களைத் தாண்டி" (Beyond the Walls) என்ற மையக்கருத்துடன், CLC மற்றும் LMS ஆகிய இரு குழுவினரும் இவ்வியாழனன்று உரோம் நகரில் துவங்கும் ஆண்டு கூட்டத்தின் துவக்கத்தில், அவர்களைச் சந்தித்தத் திருத்தந்தை, இயேசு சபையினரின் வழிநடத்துதலில் இயங்கிவரும் இக்குழுக்களின் பல்வேறு பணிகளைக் குறித்து பாராட்டு தெரிவித்தார்.

அமைதியையும், நீதியையும் நிலைநிறுத்தும் கலாச்சாரத்தை வளர்ப்பது, திருத்தூதுப் பணிகள் குடும்பங்களில் ஆரம்பமாவது, மறைபரப்புப் பணியாளர்களாக மாறுவது என்ற மூன்று கருத்துக்களில் இவ்விரு குழுக்களையும் சார்ந்தவர்கள் தங்கள் சிந்தனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஆண்டு கூட்டத்தின் ஒரு சிறப்பு அம்சமாக, சிரியாவில் நடைபெற்றுவரும் சிக்கல்களைத் தீர்க்கும் முயற்சிகளை இவ்விரு குழுவினரும் விவாதிக்க முன்வந்திருப்பதற்கு, திருத்தந்தை தன் பாராட்டுக்களைக் கூறினார்.

இயேசு சபையினரிடம் கல்வி பயின்று, பின்னர், இத்தாலியின் மாபியாவுக்கு (Mafia) எதிராக வழக்குகளை நடத்தி வரும் திருவாளர் பிரான்கோ ரொபெர்தி (Franco Roberti) அவர்கள், இவ்வியாழனன்று துவங்கியுள்ள இந்த ஆண்டுக் கூட்டத்தில், தன் வாழ்வின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.