2015-04-30 16:06:00

திருத்தந்தை : வரலாறும், பணியும் கிறிஸ்தவத்தின் அடையாளங்கள்


ஏப்.30,2015. வரலாறும், பணியும் கிறிஸ்தவத்தை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டும் இரு கூறுகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையில் குறிப்பிட்டார்.

புனிதர்களான பேதுருவும் பவுலும், மக்களின் வரலாற்றில் ஊன்றிய இயேசுவை மக்களுக்கு அறிவித்தனர் என்று கூறியத் திருத்தந்தை, வரலாற்றில் நுழைந்த கடவுள், இன்றும் தன் மக்களோடு பயணிக்கிறார் என்று விளக்கினார்.

வரலாற்றில் ஊன்றாமல், மக்களோடு இவ்வுலகப் பயணத்தில் பங்கேற்காமல் ஒரு கிறிஸ்தவரால் வாழமுடியாது என்றும், தான் தனது என்ற சுவர்களுக்குள் அமைக்கப்பட்ட ஓர் ஆய்வுக் கூடத்திலிருந்து வெளிவரும் பொருளாக கிறிஸ்தவர்கள் வாழ்வது கிடையாது என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

கிறிஸ்தவ வரலாறு, அருளின் வரலாறு எனினும், அது பாவத்தின் வரலாறாகவும் இருந்தது என்பதை திருத்தூதர் பவுல், மன்னன் தாவீதின் வாழ்விலிருந்து தரும் விளக்கம் வெளிப்படுத்துகிறது என்று, கிறிஸ்தவ வரலாற்றைக் குறித்து விளக்கினார் திருத்தந்தை.

சீடர்களின் காலடிகளை இயேசு கழுவிய நிகழ்வு, இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணிபுரிதல் கிறிஸ்தவ வாழ்வின் மற்றொரு முக்கிய அடையாளம் என்று எடுத்துரைத்தார்.

என்னுடைய வாழ்வில், மற்றவர்களை, நான் வாழும் சமுதாயத்தை, பங்குத்தளத்தை, என் சொந்த ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறேனா அல்லது, அவர்களுக்கு என்னால் இயன்ற அளவு பணிகள் புரிகிறேனா என்ற கேள்வியுடன் திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

மேலும், "மிகக் கடுமையான பல பிரச்சனைகளின் நடுவே, இறைவனின் அளவற்ற கருணையின் பேரில் நாம் கொள்ளும் நம்பிக்கையை இழக்காமல் இருப்போமாக" என்ற வார்த்தைகள் திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்களின் Twitter செய்தியாக இவ்வியாழன் வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.