ஏப்.30,2015. ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும்போது, மரணமடைபவரைவிட, அவரது குடும்பம், இத்தண்டனையின் கொடுமையை அதிகம் அனுபவித்து வாழ்கிறது என்று ஆஸ்திரேலிய ஆயர் ஒருவர் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் பிடிபட்ட ஒன்பது பேருக்கு இந்தோனேசிய அரசு, இப்புதன் அதிகாலையில் மரணதண்டனை நிறைவேற்றியது. இவர்களில் இருவர் ஆஸ்திரேலியாவைச் சார்ந்தவர்கள்.
மயூரன் சுகுமாரன், ஆன்ட்ரு சாங் என்ற இவ்விருவருக்கும் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனையைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிட்னி பேராயர் Anthony Fisher அவர்கள், எக்காரணம் கொண்டும் மரணதண்டனையை நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.
போதைப்பொருள் கடத்தல், மனிதகுலத்தை எவ்வளவுதூரம் பாதிக்கிறது என்பதை அனைவரும் அறிவோம் என்று கூறிய பேராயர் Fisher அவர்கள், தாங்கள் செய்த குற்றத்தின் விளைவுகளை உணர்ந்து, முற்றிலும் மனம் திருந்தி வாழ விரும்பிய இரு ஆஸ்திரேலியர்களை, இந்தோனேசிய அரசு கொன்றது அநீதி என்றும் கூறினார்.
இவ்விருவரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றச் சொல்லி, ஆஸ்திரேலிய அரசு பலமுறை விடுத்த கோரிக்கைகளை, இந்தோனேசிய அரசு ஏற்றுக்கொள்ளாமல், இவ்விருவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் பணியாற்றிய தங்கள் நாட்டுத் தூதரை ஆஸ்திரேலிய அரசு திரும்ப அழைத்துக்கொண்டது.
ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |