2015-04-30 16:21:00

கர்தினால் Canestri இறையடி சேர்ந்ததற்கு திருத்தந்தை அனுதாபம்


ஏப்.30,2015. இத்தாலியின் ஜெனோவா உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் Giovanni Canestri அவர்கள் இறையடி சேர்ந்ததையோட்டி தன் ஆழ்ந்த வருத்தங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு தந்தியின் வழியே வெளியிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் வேளையில் தன் அருள் பணிகளைத் துவக்கிய Giovanni Canestri அவர்கள், வேதனை, வறுமை என்ற அவலங்களை நீக்குவதை தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினார் என்று திருத்தந்தை தன் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1918ம் ஆண்டு, இத்தாலியின் Castelspina என்ற இடத்தில் பிறந்த Giovanni Canestri அவர்கள், 1941ம் ஆண்டு அருள் பணியாளராக அருள் பொழிவு செய்யப்பட்டு, உரோம் நகரில் மேய்ப்புப் பணிகளில் ஈடுபட்டார்.

1961ம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட Giovanni Canestri அவர்கள், 1987ம் ஆண்டு, ஜெனோவா உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்றார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், பேராயர் Giovanni Canestri அவர்களை, 1988ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தியபின், 1995ம் ஆண்டு முடிய அவர் பேராயர் பணியைத் தொடர்ந்தார்.

கர்தினால் Giovanni Canestri அவர்களின் அடக்கத் திருப்பலியை, கர்தினால் ஆஞ்ஜலோ சொதானோ அவர்கள், மே 2ம் தேதி, சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் தலைமையேற்று நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதனன்று, தன் 96வது வயதில் இறையடி சேர்ந்த கர்தினால் Giovanni Canestri அவர்களின் மறைவையடுத்து, கத்தோலிக்கத் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 222 ஆகக் குறைந்துள்ளது. இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையோர் 120 பேர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.