2015-04-30 16:34:00

இவ்வுலகை மாற்றும் சக்திபெற்ற தலைவர், திருத்தந்தை - ஒபாமா


ஏப்.30,2015. கால நிலை மாற்றம், உலகில் நிலவும் வறுமை, கிறிஸ்தவர்கள் வன்முறைகளுக்கு உள்ளாவது ஆகிய கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தான் பேசவிருப்பதாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், பாரக் ஒபாமா அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் வேளையில், செப்டம்பர் 23ம் தேதி, அரசுத்தலைவரின் வெள்ளை மாளிகையில் அவரைச் சந்திக்கும்போது, இந்தக் கருத்துப் பரிமாற்றம் நடைபெறும் என்று, அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள் Wall Street Journal என்ற செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்ததைக் குறித்துப் பேசிய அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள், திருத்தந்தை, கத்தோலிக்க உலகை மட்டுமல்ல, இவ்வுலகையும் மாற்றும் சக்திபெற்ற தலைவர் என்று குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றங்கள், வறியோரைப் பெருமளவு பாதிக்கின்றன என்பதை தங்கள் சந்திப்பில் பேசியதாகக் குறிப்பிட்ட அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள், அதே கருத்து மீண்டும் தங்கள் அடுத்த சந்திப்பில் இடம்பெறும் என்று தன் பேட்டியில் சுட்டிக் காட்டினார்.

உலகெங்கும் வன்முறைகளைச் சந்தித்துவரும் கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, திருப்பீடத்துடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு வருகிறது என்பதையும், அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.