2015-04-30 16:26:00

அணு ஆயுத ஒழிப்பே இளையோரின் நம்பிக்கையை வளர்க்கும்


ஏப்.30,2015. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்கள் அணுகுண்டின் அழிவைச் சந்தித்த 70ம் ஆண்டை நினைவில் கொள்ளும் இவ்வாண்டில், அணு ஆயுதப் போரினால் வரும் ஆபத்தை புரிந்துகொள்ள மனித சமுதாயம் முன்வர வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், அணு ஆயுதங்களைத் தடை செய்யும் நோக்குடன் ஐ.நா. அவை ஏற்பாடு செய்த ஒரு கருத்தரங்கில்,  இப்புதனன்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார். 

நன்னெறிக்கும், மனிதாபிமானத்திற்கும் புறம்பாக உள்ள அணு ஆயுதங்கள் இன்னும் இவ்வுலகில் உருவாக்கப்பட்டு வருவதும், அவை பல நாடுகளில் பாதுக்காக்கப்பட்டு வருவதும், இவ்வுலகை அச்சுறுத்தும் நிலைகள் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

அணு ஆயுதங்களின் பயன்பாடுகளைக் குறைப்பது என்ற கருத்து மட்டும் இந்த அச்சுறுத்தலைக் குறைக்காது என்றும், அணு ஆயுதங்களை முற்றிலும் அழிப்பது ஒன்றே, அச்சமின்றி அமைதியாக வாழ சிறந்த வழி என்றும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

பன்னாட்டு உறவுகளில் இறுக்கமான சூழல் நிலவிவரும் இக்காலத்தில், அணு ஆயுதங்களை முற்றிலும் அழிப்பது ஒன்றே, வருங்கால இளையோர் மனதில் இந்தத் தலைமுறையைப் பற்றிய நம்பிக்கையை வளர்க்கும் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.