2015-04-29 15:50:00

திருத்தந்தையின் மறைக்கல்வி – கிறிஸ்தவத் திருமண அருள்வரம்


ஏப்ரல் 29, ,2015. குடும்பம் குறித்த தன் சிந்தனைகளை புதன் மறைக்கல்வி உரையில் கடந்த சில வாரங்களாக  பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு அதே மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக, திருமணம்  குறித்து எடுத்துரைத்தார்.

இன்று நாம் இயேசு பங்குபெற்ற கானாவூர் திருமணத்தை உற்று நோக்குவோம். இங்குதான் அவர் தன் முதல் புதுமையை ஆற்றினார். தன் அன்னையின் வேண்டுகோளுக்குச் செவிமடுத்த இயேசு, தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றினார். இந்தப் புதுமை மூலம் திருமணத் தம்பதியர்மீது தன் அக்கறையை வெளிப்படுத்திய இயேசு, திருமணத்தின் முக்கியத்துவம் மற்றும் அர்த்தம் குறித்து நமக்கு எடுத்துரைக்கும் ஓர் அடையாளத்தையும் தருகிறார். இன்றைய உலகு, திருமணங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதை எதிர்நோக்குகின்றது. பல நாடுகளில் மணமுறிவுகளின் எண்ணிக்கை அதிகரித்தும், குழந்தைப் பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்தும் காணப்படுகின்றன. திருமண உடன்படிக்கைகள் முறிவடைவது இளையோரை பெருமளவில் பாதிக்கின்றது, ஏனெனில், திருமணம் என்பதை இவர்கள் ஒரு தற்காலிக உடன்படிக்கையாக நோக்கத் துவங்குகின்றனர். தோல்வி குறித்த மனித பயமே, திருமணத்திற்கும் குடும்பத்திற்கும் இறைவன் வழங்கும் அருள் குறித்த வாக்குறுதியில் நம்பிக்கை வைப்பதிலிருந்து ஆண்களையும் பெண்களையும் தடுக்கிறதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும், ஒவ்வோர் ஆணும் பெண்ணும் பாதுகாப்பான, அதேவேளை, நீடித்த உறவையும், உறுதியான திருமணத்தையும், மகிழ்ச்சியான குடும்பத்தையும் கொண்டிருக்கவே விரும்புகிறார்கள் என்ற நிதர்சனமான உண்மை இருப்பதும் நமக்குத் தெரியும். திருமணத்தின் அருள்வரத்திற்கு வழங்கவேண்டிய முக்கியமான உன்னத சாட்சியம் என்பது கிறிஸ்தவத் தம்பதியர் மற்றும் அவர்கள் குடும்பங்களின் நல்வாழ்வேயாகும். கடவுளால் திருநிலைப்படுத்தப்பட்ட அவர்களின் அன்பே, அவர்களின் அமைதி மற்றும் பற்றுமாறா உறுதிப்பாட்டின் ஆதாரமாகும். இந்த அருள்வரங்கள் உலகிற்கு மேலும் வெளிப்படையாக தெரியவேண்டுமெனில், கிறிஸ்தவத் தம்பதியரிடையே நிலவும் சரிநிகர் தன்மையானது, புதிய கனிகளைக் கொணரவேண்டும். அவை யாவன: வேலைத்தளங்களில் சரிநிகர் வாய்ப்புகள், தாய்மை மற்றும் தந்தைத்தன்மை குறித்த புதிய மதிப்பீடுகள், மற்றும், உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு மனம் திறந்தவர்களாகச் செயல்படுவதை வரவேற்றல். கானாவூர் திருமணம் போல் நம்முடைய திருமண விழாவிற்கும்,  இயேசுவையும் மரியன்னையையும் அச்சமின்றி அழைப்போம். ஏனெனில், கிறிஸ்தவத் தம்பதியர் தங்களுக்காக என மட்டும் திருமணம் செய்துகொள்வதில்லை,  அதில் சமுதாய நலனும், அனைத்துச் சமூகத்தின் நலனும் இணைந்துள்ளது.

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வி உரையில், திருமணத்தில் கிட்டும் அருள்வரம் குறித்தும் அங்கு இயேசு மற்றும் அன்னை மரியாவின் இருப்பு குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.