2015-04-29 15:31:00

காலநிலை மாற்றம் குறித்து திருப்பீடத்தின் எச்சரிக்கை


ஏப்.29,2015. காலநிலை மாற்றம் என்ற ஆபத்து, மனிதர்களால் உருவாக்கப்பட்ட துன்பம் என்பதால், அதைச் சீரமைப்பதும் மனிதர்கள் ஒவ்வொருவக்கும் உள்ள தார்மீகக் கடமை என்று திருப்பீட அறிக்கை ஒன்று கூறுகிறது.

பாப்பிறை அறிவியல் கழகமும், அமைதிக்கான மதங்கள் என்ற அனைத்துலக அமைப்பும் இணைந்து, இச்செவ்வாயன்று வத்திக்கானில் நடத்திய ஒரு கருத்தரங்கின் இறுதியில், இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.

'உலகைக் காப்பதும், மனிதகுலத்தை மாண்புறச் செய்வதும்' என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று நடைபெற்ற கருத்தரங்கின் இறுதியில், மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், அறிவியலாளர்கள் அனைவரும் இணைந்து இவ்வறிக்கையை வெளியிட்டனர்.

காலநிலை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி, பெருமழை, வெள்ளம், கடல் மட்ட உயர்வு, வெப்பக்காற்று வீசுதல் ஆகிய அனைத்து சீற்றங்களாலும், அதிக அளவு பாதிக்கப்படுவோர், வறியோரே என்பதையும் இவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.

காலநிலை மாற்றத்தை மையப்படுத்தி, இவ்வாண்டின் இறுதியில், பாரிஸ் மாநகரில் நடைபெறவிருக்கும் அகில உலகக் கருத்தரங்கில், ஆக்கப்பூர்வமான, திட்டவட்டமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.