2015-04-29 16:02:00

காற்று மாசுப்பாட்டினால் ஐரோப்பாவில் 600,000 பேர் மரணம்


ஏப்.29,2015. காற்று மாசுப்பாட்டினால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் மரணங்கள் மற்றும் நோய்கள் காரணமாக, 1.6 ட்ரில்லியன் டாலர்கள், அதாவது, 1 இலட்சத்து, 60 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

உலக நலவாழ்வு நிறுவனமான WHOவின் ஐரோப்பிய பிரிவு முதன்முறையாக மேற்கொண்ட இத்தகைய ஆய்வின் முடிவுகள், இச்செவ்வாயன்று வெளியாயின.

காற்று மாசுப்பாட்டினால், ஐரோப்பிய நாடுகளில் இறக்கும் குறைந்த வயதுடையோரின் எண்ணிக்கை, 6 இலட்சம் பேர் என்று கூறிய ஐ.நா. அதிகாரி, Christian Friis Bach அவர்கள், காற்று மாசுப்பாட்டைக் குறைப்பது, ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசரமானத் தேவை என்று கூறினார்.

நலவாழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு உலக அமைப்பினரின் பிரதிநிதிகள், ஏப்ரல் 28 முதல் 30 முடிய இஸ்ரேல் நாட்டின் Haifa நகரில் பங்கேற்றுவரும் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.