2015-04-28 16:09:00

வருங்காலத் தலைமுறைகள் நம்மைக் கடுமையாய்த் தீர்ப்பிடும்


ஏப்.28,2015. வத்திக்கானில் இச்செவ்வாயன்று பாப்பிறை அறிவியல் கழகம் நடத்திய, வெப்பநிலை மாற்றம் குறித்த அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய, பான் கி மூன் அவர்கள், வெப்பநிலை மாற்றத்துக்குரிய காரணங்களைக் களைந்து உறுதியான வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டியது இன்றியமையாதது என்று கூறினார்.

நலவாழ்வு, உணவு, தண்ணீர்ப் பாதுகாப்பு, குடியேற்றம், அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றோடு வெப்பநிலை மாற்றம் தொடர்புடையது, அறநெறி, சமூக நீதி, மனித உரிமைகள், அடிப்படை நன்னெறிகள் சார்ந்த விவகாரம் இது என்றும் உரைத்தார் பான் கி மூன்.

ஏழ்மை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் நாம் நமது நன்னெறி மற்றும் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்றத் தவறினால் வருங்காலத் தலைமுறைகள் நம்மைக் கடுமையாய்த் தீர்ப்பிடும் என்றும் எச்சரித்தார் பான் கி மூன்.

இன்று இப்பூமியின் வெப்பநிலை 4 முதல் 5 செல்சியுஸ் டிகிரி வரை உயர்ந்துள்ளது, இது நம் வாழ்வையும், இப்பூமியின் வாழ்வையும் மாற்றும் என்பதை அறிந்துள்ள இவ்வுலகினர், நம் வாழ்வுமுறைகளை மாற்ற வேண்டுமென்பதையும் உணர்ந்துள்ளனர் என்றும் கூறினார் பான் கி மூன்.

வெப்பநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் மதத்துக்கும், அறிவியலுக்கும் இடையே பிரிவினையே கிடையாது என்பதை உலகம் அறியட்டும் என்று கூறினார் பான் கி மூன்.

இக்கருத்தரங்கில், 20 மதத்தலைவர்கள், நொபெல் வேதியல் விருது பெற்ற Paul Crutzen அவர்கள் உட்பட 20 அறிவியலாளர்கள், 20 கல்வியாளர்கள் என, பல முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.