2015-04-27 15:42:00

வாரம் ஓர் அலசல் – மன்னியுங்கள், தீர்ப்பிடாதீர்கள்


ஏப்.27,2015. அன்பு நெஞ்சங்களே, இன்றைய நிகழ்ச்சியைத் தொடங்கும்போது நேபாள நிலநடுக்கம் பற்றிய காட்சிகளே நம் கண்முன் நிற்கின்றன. நேபாளத்தில் கடும் நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, இதில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நம் ஒருமைப்பாட்டுணர்வையும், செபங்களையும் தெரிவித்து இன்றைய நிகழ்ச்சியைத் தொடங்குகிறோம். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், அந்நாட்டில் கடந்த எண்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேபாள அரசு இதை ஒரு தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து ஐந்நூறை எட்டியுள்ளது. எவரெஸ்ட் மலை, இந்நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும், அம்மலையிலும் பனிப்பாறைச் சரிவுகள் கடும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. இஞ்ஞாயிறன்று மீண்டும் நேபாளத்தில் நிலநடுக்கம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர், நேபாளத்திலும், அண்டை நாடுகளிலும் கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தனது தோழமை உணர்வைத் தெரிவித்தார்.  வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஏறக்குறைய எழுபதாயிரம் திருப்யணிகளிடம், இப்பேரிடரால் துன்புறுவோருக்காகச் செபிக்குமாறு  கேட்டுக்கொண்டார். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் உதவிகள் பெறுவார்களாக எனச் சொல்லி அன்னைமரியிடம் அனைவரோடும் சேர்ந்து செபித்தார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறன்று கத்தோலிக்கத் திருஅவையில் 52வது உலக இறையழைத்தல் தினம் சிறப்பிக்கப்பட்டது. அந்நாளில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் 19 தியோக்கோன்களை, புதிய அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்தார்  திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலி மறையுரையில் புதிய அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தை கூறிய அறிவுரைகளில் சிலவற்றை, அன்பு நெஞ்சங்களே, உங்களோடு இப்போது பகிர்ந்து கொள்கிறோம்.

“இரக்கம் காட்டுவதில், கருணையோடு வாழ்வதில் களைப்படையாதீர்கள். ஏனெனில் ஒப்புரவு அருளடையாளத்தை நீங்கள் நிறைவேற்றும்போது தீர்ப்பிடமாட்டீர்கள், ஆனால் மன்னிப்பு வழங்குவீர்கள். மன்னிப்பதில் ஒருநாளும் சோர்வடையாமல் இருக்கும் இறைவனைப் பின்பற்றுங்கள். பிறருக்கு எடுத்துக்காட்டுகளாய் வாழுங்கள். நீங்கள் சொல்வது உண்மையிலேயே உங்கள் இதயத்திலிருந்து வெளிவருவதாய் இருக்கட்டும். உங்கள் மறையுரைகள் கேட்பவரைச் சலிப்படைய வைக்கக் கூடாது. உங்கள் வாழ்வின் நறுமணம், பிறருக்குச் சான்று பகர்வதாக அமைய வேண்டும். ஏனெனில் எடுத்துக்காட்டுகளே வாழ்வைக் கட்டி எழுப்ப உதவும். முன்மாதிரிகையாய் இல்லாத வார்த்தைகள், வெற்று வார்த்தைகளே. சான்று வாழ்க்கை மூலம் வெளிப்படாத வார்த்தைகள், கேட்பவரின் இதயங்களை ஒருபோதும் தொடாது, ஆனால் அவை தீமையைக்கூட விளைவிக்கும்,  நன்மை செய்யாது..."       

மன்னியுங்கள், தீர்ப்பிடாதீர்கள், பிறருக்கு எடுத்துக்காட்டுகளாய் வாழுங்கள், வாழ்வால் சான்று பகராத வார்த்தைகள், வெற்று வார்த்தைகள். அன்பு நெஞ்சங்களே, திருத்தந்தையின் இந்த அறிவுரைகள், நாமும் நம் வாழ்வில் செயல்படுத்த வேண்டியவை. கடந்த சில நாள்களாக, ஆர்மேனிய இனப்படுகொலை, துருக்கி நாட்டின் காலிப்போலி படுகொலை என, வரலாற்றில் இலட்சக்கணக்கில் மனித உயிர்களைக் காவுகொண்ட படுகொலைகளின் நூறாம் ஆண்டு நினைவுகள் கடைப்பிடிக்கப்பட்டன. இம்மாதம் 17ம் தேதி, தென்கிழக்கு ஆசிய நாடாகிய கம்போடியாவிலும் இப்படியோர் இனப்படுகொலை நினைவுகூரப்பட்டது. Phnom Penhன் புறநகர்ப் பகுதியிலுள்ள Choeung Ek நினைவிடத்தில், கம்போடியாவின் கெமர் ரூஜ் ஆட்சியில் கொல்லப்பட்டவர்களை நினைத்து மக்கள் அஞ்சலி செலுத்தினர். 1975ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதியன்று Pol Pot என்ற சர்வாதிகாரியால் வழிநடத்தப்பட்ட கெமர் ரூஜ் அமைப்பு கம்போடியாவின் தலைநகரைக் கைப்பற்றி அந்நாட்டை ஆக்ரமித்தது. ஸ்டாலினிசம், மாவோயிசம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நில உடைமை சார்ந்த பொதுவுடைமைக் கோட்பாட்டை உருவாக்குவதற்கு கெமர் ரூஜ் திட்டமிட்டது. மக்கள் மதிப்பற்றவர்கள், இவர்கள் வாழ்வதில் இலாபம் ஒன்றுமில்லை, இவர்களை அழிப்பதில் இழப்பு ஏதும் இல்லை என்று சொல்லி, மக்கள் துப்பாக்கி மற்றும் கத்திமுனைகளில், நகரங்களிலிருந்து கட்டாயமாக கிராமப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர், சித்ரவதைக்கும், கட்டாய வேலைக்கும், கூட்டுக்கொலைகளுக்கும் உள்ளாகினர். ஏறக்குறைய எல்லா நகரங்களுமே காலிசெய்யப்பட்டன. கெமர் ரூஜின் இரக்கமற்ற ஆட்சியில், கம்போடியாவின் 25 விழுக்காட்டு மக்கள், அதாவது ஏறக்குறைய இருபது இலட்சம் மக்கள் ஊட்டச்சத்துக் குறைவால் இறந்தனர். 1975ம் ஆண்டுக்கும் 1979ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 15 இலட்சம் முதல் 30 இலட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர். இவ்வெண்ணிக்கை எண்பது இலட்சம் என்றுகூடச் சொல்லப்படுகிறது. வியட்நாம், கம்போடியாவை ஆக்ரமித்ததைத் தொடர்ந்து கெமர் ரூஜின் இனப்படுகொலை முடிவுக்கு வந்தது. இருபதாயிரம் பேர் ஒட்டுமொத்தமாகப் புதைக்கப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கம்போடியப் படுகொலை நினைவு நிகழ்வில் அந்நாட்டு மக்கள் கூறியவைதான் இன்று நம் கவனத்தை ஈர்க்கின்றன. கலிஃபோர்னியா பல்கலைக்கழக மனித உரிமைகள் மையம் கம்போடியாவின் 250 கிராமங்களில், ஆயிரம் பேரிடம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இவர்களில் 25 விழுக்காட்டினர் கெமர் ரூஜின் சித்ரவதைக்கு உள்ளானவர்கள், ஐந்தில் ஒருவர் மக்கள் கொலை செய்யப்படுவதைப் பார்த்தவர்கள். மற்றும் மூன்றில் ஒருவர் சித்ரவதைகளைப் பார்த்தவர்கள்.

கம்போடியாவில் தற்போது உயிர்வாழும் கெமர் ரூஜ் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கும், அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருக்கிறது. அதனால் அந்நாட்டுக்குத் தற்போது தேவைப்படுவது ஒப்புரவு, மன்னிப்பு. கருணை, பரிவன்பு, ஒருவரையொருவர் குற்றம் சுமத்தாமல், தீர்ப்பிடாமல் ஒருவர் ஒருவரைச் சந்தித்தல். இவ்வாறு கம்போடியாவில் சொல்லளவில் மட்டுமல்ல, ஒப்புரவு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. அந்நாட்டின் சில இடங்களில் கெமர் ரூஜ், ஆட்களே முன்வந்து தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒப்புரவை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர்.

கெமர் ரூஜ் அமைப்பின் முன்னாள் வீர்ர் ஒருவர் தனது இளமையில் செய்த வன்செயலைச் சொல்லி, “தயவுசெய்து என்மீது கோபம் வேண்டாம், என்னை மன்னித்து விடுங்கள், நான் நானாகச் செய்யவில்லை, நான் துணிச்சலற்றவன், அவர்கள் ஆணையிட்டார்கள், என்ன செய்வதென்று தெரியாமல் செய்துவிட்டேன்” என்று மன்னிப்புக் கேட்டுள்ளார். பழைய காயங்கள் குணமடைவதற்கு ஒரே மருந்து மன்னிப்பு. பாதிக்கப்பட்டவரும் பழைய காயங்களைக் கிளறிக்கொண்டே இருக்காமல் மன்னிப்பது. வன்முறைக் கும்பல்களும், யாரோ சொல்வதை நம்பி, பிறரை அநியாயமாகத் தீர்ப்பிடாமல் உணர்ச்சியின் அடிப்படையில் செயல்படுவதைத் தவிர்த்தல். இன்றைய உலகை, “கலவரக் கும்பல்” என்ற பயங்கரமான நோய் ஒன்று அச்சுறுத்தி வருகிறது. ஒரு தவறான செய்தி, ஒரு சாதாரண மனிதரையும் கலவரக் கும்பலில் ஒருவராக ஆக்கி விடுகிறது. எடுத்துக்காட்டாக, ஆப்கானில் குரான் புனித நூலைச் சேதப்படுத்தியதாக ஒரு பெண் கும்பலால் கொன்று எரிக்கப்பட்டார். ஆனால், அந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்களில் பலருக்கு தங்களுக்குக் கிடைத்த தகவல் எவ்வளவு தூரம் உண்மை என்பதோ அல்லது தங்கள் செயலின் முடிவு எப்படி இருக்கும் என்பதோ கூடத் தெரியாது. ஏதோ கும்பலோடு சேர்ந்து கூப்பாடு போட்டு, அப்பாவிப் பெண் மீது  ஆவேசமாக கற்களை வீசி கொலை செய்தனர். இப்படிப்பட்ட வன்கும்பல்களின் எண்ணிக்கை இக்காலத்தில் பெருகிக் கொண்டே போகிறது. சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்திகள் போன்றவை மூலம் ஏற்படும் தகவல் பரிமாற்றங்களும், சில வேளைகளில் ஆபத்தை உருவாக்குகின்றன.   

கலவரக் கும்பல்கள் உருவாகச் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஏதேனும் ஒரு தகவலைக் கேட்டு அதை உறுதிப்படுத்துவதைவிட, உணர்ச்சிப்பெருக்கின் உந்துதலுக்கு அதிக இடம் கொடுப்பது. ஒரு காரியத்தைப் பகுத்து ஆராயும் அறிவுநிலைக்கு இடம் கொடுக்காமல் இருப்பது. மற்றவர்கள் ஈடுபடும் ஒரு காரியத்தில்தானே நானும் ஈடுபடுகிறேன் என்ற பொறுப்பற்ற தன்மை. இத்தனை பெரிய கும்பலில் நான் செய்வதை யார் கவனிக்கப் போகிறார்கள் என்ற மெத்தனப் போக்கு, வன்கும்பல் கொடுக்கும் ஊக்கம்... இந்த மனநிலைகளில் கலவரக் கும்பல்கள், துணிச்சலுடன் செயலில் இறங்குகின்றன. இந்தக் கும்பல்களால் பெருமளவில் உயிர்ச்சேதங்களும், பொருள்சேதங்களும் ஏற்படுகின்றன.

கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதுமே பொய்யாக இருக்கும்போது எதையும் நாம் தீர ஆராய வேண்டும். ஒருவர் ஏதாவது செய்து கொண்டிருப்பார். அவரைப் பற்றியோ, அவர் செயலைப் பற்றியோ ஆயிரம் கற்பனைகளை வளர்த்து அவரை நம் எண்ணத்தாலே சித்ரவதை செய்துகொண்டிருப்போம். உண்மையை ஆராயும்பொழுது நம் தீர்ப்பு அப்படியே மாற்றி எழுத வேண்டியிருக்கும். எனவே ஒருவர் பற்றிய முழுமையான செய்தியையும், உணர்வுகளையும் உன்னிப்பாகக் கவனிப்பது நல்லது. பேசுபவரின் சொல், செயலைக் கண்டு தீர்மானமாக எதுவும் சொல்ல முடியாது. ஒருவர் கோபப்படுகிறார் என்றால், அவர் சுயநலவாதி என்று அர்த்தமில்லை. திரும்பிப் பார்க்கிறார் என்றால் அவர் ஆர்வமாக இல்லை என்று பொருளில்லை. ஒருவரின் உள்நோக்கம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை வாய்ந்தவர். எனவே யாரையும் தீர்ப்பிட வேண்டாம். மாறாக, புரிதலுடன் மன்னித்து வாழ்வோம். நல்ல விதைகள் எப்போதுமே பயன் தராமல் போவதில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.