2015-04-27 16:13:00

திருத்தந்தை : குடும்பங்களின் தினசரி வாழ்வில் உதவுங்கள்


ஏப்.27,2015. இன்றைய உலகில் எழுந்துவரும் சவால்களையும், தவறான கொள்கைகளையும் எதிர்த்து நின்று சமாளிக்கும் வகையில், பெனின் நாட்டு பொதுநிலையினரைத் தயாரிக்க வேண்டியது தலத் திருஅவையின் கடமையாகிறது என அந்நாட்டு ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல பகுதிகளிலிருந்து 'அத் லிமினா' சந்திப்பை மேற்கொள்ளும் ஆயர்கள் வரிசையில், உரோம் நகருக்கு வருகை தந்துள்ள பெனின் நாட்டு ஆயர்களை, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

இன்றைய குடும்பங்கள் எதிர்நோக்கிவரும் சவால்கள் குறித்தும் பெனின் நாட்டு ஆயர்களிடம் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களின் விசுவாசத்தில் மட்டுமல்ல, அவர்களின் தினசரி வாழ்விலும் உதவ வேண்டியது ஆயர்களின் கடமை என்றார்.

மேய்ப்புப் பணி பராமரிப்பு, குடும்பங்கள் பாதுகாக்கப்படுதல், இளைஞர்களுக்கு கல்வி புகட்டுதல், கலாச்சாரங்களிடையே ஒத்துழைப்பு, மதங்களிடையே பேச்சுவார்த்தைகள் போன்றவற்றை ஊக்குவிக்கவேண்டிய பெனின் ஆயர்களின் கடமைகளையும் வலியுறுத்திய திருத்தந்தை, அண்மையில் கர்தினால் தவ்ரான் அவர்களின் தலைமையில், மதங்களிடையே உரையாடல் என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற கருத்தரங்கு பற்றி தன் பாராட்டுதல்களையும் வெளியிட்டார்.

இயேசுவின் கருணையை வெளிப்படுத்தும் திருஅவையின் சமூக நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறவேண்டும் என்ற ஊக்கத்தையும் ஆயர்களிடம் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதே நாளில், உரோம் யூத தலைமைக் குரு ரிக்கார்தோ தி ஸெஞியும் திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து உரையாடினார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.