2015-04-27 16:23:00

திருத்தந்தை - இரக்கம் காட்டுவதில் களைப்படையாதீர்கள்


ஏப்.26,2015. புதிய அருள்பணியாளர்கள் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும்போது, தீர்ப்பிடாமல், மன்னிப்பு வழங்கவிருப்பதால், அவர்கள் இரக்கம் காட்டுவதில் களைப்படைய வேண்டாமெனவும், மன்னிப்பதில் ஒருநாளும் சோர்வடையாமல் இருக்கும் இறைவனைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்கத் திருஅவையில், இறையழைத்தலுக்காக செபிக்கும் 52வது உலக தினம் சிறப்பிக்கப்பட்ட இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் 19 தியோக்கோன்களை, அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்த திருப்பலி மறையுரையில் புதிய அருள்பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

எடுத்துக்காட்டுகளே வாழ்வைக் கட்டி எழுப்ப உதவும் என்பதால், அருள்பணியாளர்கள் எடுத்துக்காட்டுகளாய் வாழுமாறும் வலியுறுத்திய திருத்தந்தை, மனிதர்கள் மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மனிதர் மத்தியில் சலுகை பெற்றவர்களாகிய  அருள்பணியாளர்கள்,  இறைவனுக்கேற்ற காரியங்களைச் செய்யுமாறும் கூறினார்.

திருப்பலி, செயற்கையான வழிபாட்டுமுறை அல்ல, மற்றும், இது நம் ஆண்டவரின் மரணத்திலும் உயிர்ப்புப் பேருண்மையிலும் பங்கெடுப்பது என்பதால், திருப்பலியை வேகமாக நிறைவேற்ற வேண்டாமெனக் கூறிய திருத்தந்தை, மறையுரைகள், கேட்பவரைச் சலிப்படைய வைக்கக் கூடாது என்றும் கூறினார்.

புனிதக் கோட்பாடுகள் திருப்பணியை ஆற்றும்போது, ஒரே போதகராகிய கிறிஸ்துவின் மறைப்பணியில் பங்கு கொள்கின்றீர்கள், நீங்கள் மகிழ்வோடு பெற்றுக்கொண்ட இறைவார்த்தையை ஒவ்வொருவருக்கும் அறிவியுங்கள் என்றும் புதிய அருள்பணியாளர்களாடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

நீங்கள் சொல்வது உண்மையிலேயே உங்கள் இதயத்திலிருந்து வெளிவருவதாய் இருக்கட்டும். உங்கள் வாழ்வின் நறுமணம், பிறருக்குச் சான்று பகர்வதாக அமைய வேண்டும். ஏனெனில். முன்மாதிரிகையாய் இல்லாத வார்த்தைகள், வெற்று வார்த்தைகளே. சான்று வாழ்க்கை மூலம் வெளிப்படாத வார்த்தைகள், கேட்பவரின் இதயங்களை ஒருபோதும் தொடாது, ஆனால் அவை தீமையைக்கூட விளைவிக்கும்,  நன்மை செய்யாது என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.