2015-04-25 15:19:00

இறைவனின் கருணை, கனிவை அனைவருக்கும் வழங்க அழைப்பு


ஏப்.25,2015. “இறைவனின் கருணையையும் கனிவையும் அனைவருக்கும் வழங்குவதற்கு, கிறிஸ்தவர்களாகிய நாம் நம் சுயத்தைவிட்டு வெளியேற அழைக்கப்படுகிறோம்” என்று இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், வருகிற மே முதல் தேதி இத்தாலியின் மிலானில் துவங்கும் எக்ஸபோ 2015 தொடக்க நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் நேரடி ஒளிபரப்பின் மூலமாக கலந்து கொள்வார் என மிலான் உயர்மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

இத்தாலிய ராய் தொலைக்காட்சி நிறுவனம், வத்திக்கான் தொலைக்காட்சி நிறுவனம் ஆகிய இரண்டின் ஒத்துழைப்பால் இது இடம்பெறவுள்ளது.

இன்னும், இஞ்ஞாயிறன்று உலகளாவியத் திருஅவையில் 52வது இறையழைத்தல் ஞாயிறு சிறப்பிக்கப்படும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 19 தியாக்கோன்களை அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்துவார்.

இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில், திருநிலைப்பெறவுள்ள 19 தியாக்கோன்களில் 13 பேர், உரோம் மறைமாவட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்; ஏனைய 6 பேரில் ஒருவர் இந்தியர்.

மேலும், மெக்சிகோ நடிகர் Eduardo Verástegui அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார். நடிகர் Eduardo Verástegui அவர்கள், பாப்பிறை நிறுவனத்தில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருப்பதோடு, அந்நிறுவனத்தின் பிறரன்புப் பணிகளுக்கு நிதி ஆதரவும் வழங்கி வருகிறார்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.