2015-04-24 15:52:00

திருத்தந்தை,நமீபியா,லெசோத்தோ குடியரசுகளின் ஆயர்கள் சந்திப்பு


ஏப்.24,2015. நமீபியா மற்றும் லெசோத்தோ குடியரசுகளின் ஆயர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமண முறிவு, பிரிந்து வாழ்தல் உட்பல சில காரணங்களால் பிரச்சனைகளைச் சந்திக்கும் கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு உதவிசெய்து வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அத் லிமினாவை முன்னிட்டு இந்நாடுகளின் எட்டு ஆயர்களைச் சந்தித்து ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்ட கருத்துக்களுக்குக் கவனமுடன் செவிமடுத்த திருத்தந்தை, தரமான குடும்பங்களில் பிள்ளைகள் நிபந்தனையில்லாமல் அன்புகூரப்படுவதை உணர்கின்றனர் மற்றும் பிள்ளைகளும் அதேபோல் அன்பு கூருகின்றனர் என்று தெரிவித்தார்.

இத்தகைய குடும்பங்களிலிருந்து குருத்துவ மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்து கொள்ளும் பிள்ளைகள், திருஅவையின் குடும்பத்துக்கு நிபந்தனையற்ற தொண்டுபுரியத் தயாராய் இருப்பார்கள் என்றும் உரைத்த திருத்தந்தை, இறையழைத்தல் குறைந்து வரும் இக்காலத்தில், கிறிஸ்துவுக்காக வாழ்வை அர்ப்பணிப்பதில் கிடைக்கும் நிறைவான மற்றும் மகிழ்வான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவது முக்கியம் என்றும் கூறினார்.

கற்பில் கன்னிமை, உலகப் பொருள்களிலிருந்து பற்றறுத்தல், குருத்துவ அர்ப்பணத்தை உண்மையிலும் மகிழ்விலும் வாழ்தல் ஆகிய ஆயர்களின் தொடர்ந்த எடுத்துக்காட்டான வாழ்வு மூலம் கிறிஸ்தவ சமூகங்கள் உருவாக்கப்பட்டால், குருத்துவ மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைப் பெருமளவில் இளையோர் தேர்ந்துகொள்வார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆழ்ந்த மற்றும் இடைவிடாமல் செபிக்கும் மனிதர்களாக ஆயர்கள் வாழுமாறும் வலியுறுத்திய திருத்தந்தை, நீரூற்றின் அருகில் நடப்பட்ட மரங்களாக மிகுந்த கனிதருமாறும் நமீபியா மற்றும் லெசோத்தோ குடியரசுகளின் ஆயர்களைக் கேட்டுக்கொண்டார்.

நமீபியா, தெற்கு ஆப்ரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடலை ஓர் எல்லையாகக் கொண்டுள்ள ஒரு நாடாகும். லெசேத்தோ தென் ஆப்ரிக்காவுக்குள் இருக்கும் நாடாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.