2015-04-23 15:53:00

தடுப்புச் சுவருக்குப் பதிலாக ஒரு பள்ளியைக் கட்டலாம், எர்பில் ஆயர்


ஏப்.23,2015. 2004ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆரம்பத் தாக்குதல்கள் நிகழ்ந்தபோது பாதுகாப்புக்கென மக்கள் தடுப்புச் சுவர்கள் கட்ட முடிவெடுத்தனர் என்றும், தடுப்புச் சுவருக்குப் பதிலாக ஒரு பள்ளியைக் கட்டலாம் என்று தான் ஆலோசனை தந்ததாகவும் ஈராக் நாட்டின் எர்பில் ஆயர் பாஷர் மாத்தி வார்தா   அவர்கள் கூறினார்.

“நாம் அனைவரும் நாசரேத்தூர் மக்களே” என்ற தலைப்பில், இஸ்பெயின் நாட்டு மத்ரித் நகரில் அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய ஆயர் வார்தா  அவர்கள், கல்வி ஒன்றே இன்றையக் கலவரங்களுக்குத் தகுந்த தீர்வு என்று கூறினார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டு வைத்து முதலில் தாக்கியது, தான் பணியாற்றிய வந்த பங்குத்தளமே என்று சுட்டிக்காட்டிய ஆயர் வார்தா அவர்கள், தங்களைப் பாதுகாக்க மக்கள் கான்கிரீட் சுவர் எழுப்ப நினைத்தபோது அதற்குப் பதிலாக    ஒரு பள்ளியைக் கட்டுவோம் என்று தான் கொடுத்த ஆலோசனையின்படி பள்ளி ஒன்று கட்டப்பட்டது என்று கூறினார்.

கட்டப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவர்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இஸ்லாமியர்களே என்று கூறிய ஆயர் வார்தா அவர்கள், கிறிஸ்தவரக்ளும், இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பது நிறைவுதரும் ஒரு முயற்சி என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.