2015-04-22 17:05:00

மத்திய தரைக் கடல் குடியேற்றதாரரின் "மரணப்பாதை"


ஏப்.22,2015. மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு வர முயன்று உயிரிழக்கும் ஆப்ரிக்கர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு முன்பிருந்ததைவிட அதிகமாக இருப்பதாக, அனைத்துலக குடியேற்ற அமைப்பு ஐ.ஓ.எம் கூறுகிறது.

2015ம் ஆண்டு ஏப்ரல் வரை மட்டுமே, ஏறக்குறைய 1,700க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கடல் கடக்கும் முயற்சியில் இறந்திருப்பதாக ஐ.ஓ.எம் அமைப்பு கூறுகிறது.

கடந்த ஞாயிறன்று, இத்தாலியத் தீவான லாம்பதுசாவின் தெற்கே, லிபியாவின் கடல் பரப்பில் நடந்த விபத்தில் ஏறக்குறைய 800 பேர் கடலில் மூழ்கி இறந்தனர் என அஞ்சப்படுகின்றது.

இந்த இறப்பு விகிதம் தொடர்ந்தால், இந்த ஆண்டு இது போன்ற முயற்சிகளில் இறக்கும் குடியேற்றதாரரின் எண்ணிக்கை 30,000த்தை எட்டும் என்று ஐ.ஓ.எம் நம்புகிறது.

இத்தாலியக் கடற்படையினர் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்குவோரைக் காப்பாற்ற கடுமையாக முயற்சிக்கின்றனர் என்று கூறும் ஐ.ஓ.எம் அமைப்பின் இத்தாலிய இயக்குனர் Federico Soda அவர்கள், அதிகரித்து வரும் இறப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்று கூறுகிறார்.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேலும் முழுமையானதாக இருக்க வேண்டும் என்றும், இந்த நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும், இது ஒரு மனிதாபிமான அவசரநிலை, இதற்கான பதில் நடவடிக்கை என்பது முழுமையானதாக இருக்கவேண்டும் என்றும் Soda அவர்கள் கூறினார்.

குடியேற்றதாரரின் பெருமளவான இறப்புகள் மத்திய தரைக் கடல் பகுதியிலேயே நிகழ்கின்றன என்று ஐ.ஓ.எம் கூறுகிறது.

ஆதாரம்  : AFP /வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.