2015-04-22 16:26:00

அமைதி ஆர்வலர்கள் – 1978ல் நொபெல் அமைதி விருது-பாகம் 2


ஏப்.22,2015. 1978ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை, எகிப்திய முன்னாள் அரசுத்தலைவர் Muhammad Anwar al-Sadat அவர்களுடன் பகிர்ந்து கொண்டவர் Menachem Begin. இவர் இஸ்ரேல் நாட்டின் ஆறாவது பிரதமர் மற்றும் இஸ்ரேல் யூத நாடு, ஓர் அரபு நாட்டுடன் முதல் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளக் காரணமான புகழ்பெற்ற தலைவர். “எவ்வளவுதான் இன்னல்கள் மற்றும் பிரச்சனைகள் இருந்தாலும்கூட நான் எப்போதும் இஸ்ரேல் மனிதர்தான்” என்று சொல்லுமளவுக்கு நாட்டுப் பற்று மிக்கவர். “யூதர்கள் எந்த மனிதர் முன்னிலையிலும் தலை வணங்காதவர்கள். இறைவனுக்கு மட்டுமே தலை தாழ்த்துபவர்கள்”; “எருசலேம் எங்கள் தலைநகராக இருந்தது. என்றென்றும் அது எங்கள் தலைநகராகவே அமைந்திருக்கும். இஸ்ரேல் நிலம் முழுவதும், இஸ்ரேல் மக்களுக்காக எக்காலத்துக்கும் பாதுகாக்கப்படும்”; “இஸ்ரேலுக்கு எதிராக உலகில் எழுத்துவடிவில் எழுதப்பட்டுள்ளது மறைய வேண்டும்”… இவ்வாறெல்லாம் கூறியவர் Menachem Begin. இவரின் இந்தக் கூற்றுகளைக் கேட்கும்போதே இவர் எவ்வளவு தேச பக்தர் என்பது விளங்கும். Menachem Begin அவர்கள் ஒரு தீவிர தேசப்பற்றுகொண்ட தலைவராக இருந்தபோதிலும், எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானபோது இவர் உலகினரின் பாராட்டைப் பெற்றார். அமெரிக்க ஐக்கிய நாட்டு முன்னாள் அரசுத்தலைவர் ஜிம்மி கார்ட்டரின் முயற்சியால் அமெரிக்காவின் Camp Davidல்1978ம் இவ்வமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1913ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி தற்போதைய பெலாருஸ் நாட்டின் Brest Litovskல் பிறந்த Menachem Begin அவர்கள், இளவயதிலிருந்தே தனது யூத இனத்தில் தீவிரப் பற்று கொண்டிருந்தார். போலந்தில் வார்சா பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியில் பட்டயம் பெற்ற பின்னர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். போலந்தில் நிர்வாகத்திலும், தலைமைத்துவத்திலும் இவர் சிறந்து விளங்கினார். அதனால் போலந்தில் வாழ்ந்த யூதர்களைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட Betar Poland நிறுவனத்தின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். 1939ம் ஆண்டு செப்டம்பரில் போலந்தை ஜெர்மனி ஆக்ரமித்தபோது, பாதுகாப்பு கருதி லித்துவேனியா சென்றார் Begin. எனினும், 1940ம் ஆண்டில் இவர் NKVD என்ற சோவியத் இரகசிய காவல்துறை படையால் கைதுசெய்யப்பட்டு சைபீரியாவில் வதைப்போர் முகாமுக்கு அனுப்பப்பட்டார். 1941ம் ஆண்டில் இரஷ்யாவை ஜெர்மனி ஆக்ரமித்தபோது, இவர் போலந்து குடிமகன்  என்பதால் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் இவர் போலந்தின் விடுதலைப் படையில் சேர்ந்தார். நாத்சிகளின் யூதஇன அழிப்பு நடவடிக்கையில் இவரின் தாயும் தந்தையும் கொல்லப்பட்டனர். இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டு ஓர் அரசியல்வாதியாக வேண்டுமென்று தீர்மானித்தார் Begin.

1942ம் ஆண்டில் போலந்தின் விடுதலைப் படையுடன் பாலஸ்தீனம் சென்று Irgun எனப்படும் யூத இனத்தவருக்காகப் போராடும் குழுவில் இணைந்தார் Begin. இக்குழுவினர், பிரிட்டனால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். எனினும், விரைவிலேயே இக்குழுவின் தலைவரானார் Begin. இரண்டாம் உலகப் போரில் பிரித்தானியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்த இவர் திட்டமிட்டார். இது அக்காலத்தில் நம்பிக்கைத் துரோகம் எனக் கருதப்பட்டது. ஏனெனில் அச்சமயத்தில் பிரிட்டன் வட ஆப்ரிக்காவில் பல இன்னல்களை அனுபவித்தது. பயங்கரவாதச் செயல்களுக்காக, Begin பிரிட்டன் கொலைப் பட்டியலில் ஒருவராக இணைக்கப்பட்டார். போரின் இறுதியில், ஐரோப்பிய யூத அகதிகள் சட்டத்துக்குப் புறம்பே பாலஸ்தீனாவில் நுழைவதை பிரிட்டன் அதிகாரிகள் எதிர்த்ததால் Irgun குழு தனது தாக்குதலைத் தொடர்ந்தது. 1946ல் எருசலேமில் King David விடுதி குண்டு வைத்து தாக்கப்பட்டபோது இவ்வன்முறை உச்சநிலைக்குச் சென்றது. 

1948ம் ஆண்டில் இஸ்ரேல் தனி நாடாக உருவாக்கப்பட்டபோது, அந்நாட்டின் முழுக்கட்டுபாட்டையும் கொண்டிருக்க விரும்பி, Haganah என்ற இஸ்ரேல் இராணுவத்தை அமைத்தார் David Ben-Gurion. இஸ்ரேலுக்குள்ளே Irgun குழு செயல்படுவதை விரும்பாமல் ஆயுதம் ஏந்திய அக்குழுவின் தலைமையைக் கைதுசெய்தார் Ben-Gurion. இவர் அக்குழுவில் பலரை இஸ்ரேல் இராணுவத்துடன் சேர்த்துக்கொண்டார். Begin அவர்கள், Irgun குழுவைக் கலைத்து அதை ஒரு சட்டமுறையான அரசியல் கட்சியாக மாற்றினார். அதன் தலைவராகவும் உயர்ந்தார் Begin. 1967ம் ஆண்டின் ஆறுநாள் சண்டை, இஸ்ரேல் தேசிய ஒன்றிப்பு அரசு உருவாகக் காரணமானது. இதன் காரணமாக, இஸ்ரேல் அமைச்சரவையில் Begin முதன்முறையாக சேர்ந்தார். 1970ம் ஆண்டில் எகிப்து அரசுத்தலைவர் நாசர், சூயஸ் கால்வாய் முழுவதும் போர் நிறுத்தம் தேவை என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு இவர், இஸ்ரேல் நாட்டின் இருப்பை எகிப்து ஏற்றுக்கொண்டால் இந்தப் போர் நிறுத்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திடுவதாகச் சொன்னார்.  எட்டு தடவைகள் பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து எதிர்க்கட்சி சார்பாகப் போட்டியிட்டு தோல்வியடைந்து, பின்னர் 1977ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றியடைந்தார்.

1977ம் ஆண்டில் இஸ்ரேலின் பிரதமரான Begin, 1983ம் ஆண்டுவரை அப்பதவியில் இருந்தார். இஸ்ரேல் அருகே பாலஸ்தீனிய முகாம்கள் இருப்பதைச் சகித்துக்கொள்ள முடியாமல் அவற்றின்மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தினார். 1982ம் ஆண்டில் கலிலேயா அமைதி நடவடிக்கையைத் தொடங்கினார். இது இஸ்ரேலின் வடக்கு எல்லைகளைப் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றியது. 1981ம் ஆண்டில் Osirakல் ஈராக்கின் அணு உலையை அழிப்பதற்கு இவர் இஸ்ரேல் விமானப்படைக்கு ஆணையிட்டார். அதற்கு உலகினரின் கண்டனத்துக்கு ஆளானார். அதற்கு இவர் “இரண்டாம் உலகப்போர் காலத்தில் யூத இன அழிப்புச் செயலில் 15 இலட்சம் சிறார் Zyklon வாயுவால் நஞ்சு ஏற்றப்பட்டனர். தற்போது இஸ்ரேல் சிறார் கதிர்வீச்சுத் தாக்கத்தால் நஞ்சு ஏற்றப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். ஈராக்கிலிருந்து அணுவீச்சுக் கதிர்களால் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இரு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இது நிகழ்ந்தால் புதிய யூத இன அழிப்புச் செயலாக இது இருக்கும். இந்த ஆபத்து எமது திறமையான விமான ஓட்டிகளால் தடுக்கப்பட்டுள்ளது" என்று சொல்லி  தனது செயலை நியாயப்படுத்தினார்.  துணிச்சலான நாட்டுப்பற்றுமிக்க தலைவராகப் பணியாற்றிய Menachem Begin அவர்கள், தனது மனைவி Aliza இறந்த சில காலத்திலேயே 1983ம் ஆண்டில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். 1992ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி இவர் இறக்கும்வரை மறைவாகவே வாழ்ந்தார். எருசலேமில் ஒலிவ மலையில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். ஐரோப்பாவில் தனது போர்க்கால அனுபவங்களை விவரிக்கும் "வெள்ளை இரவுகள்" என்ற இவரின் நூலும், "புரட்சி" என்ற இவரின் மற்றொரு நூலும் பல மொழிகளிலும், பல்வேறு கட்டுரைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.