2015-04-21 15:10:00

விவிலியத் தேடல் – இரு புதல்வர்கள் உவமை – பகுதி - 3


பல 'ஹாலிவுட்' திரைப்படங்களை வழங்கியிருக்கும் MGM (Metro Goldwyn Mayer) திரைப்பட நிறுவனத்தை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர், சாமுவேல் கோல்ட்வின் (Samuel Goldwyn) அவர்கள். ஒரு கதையை எவ்விதம் சொன்னால், அது மக்களைக் கவர்ந்திழுக்கும் என்பதை, கோல்ட்வின் அவர்கள் விளக்கியபோது, "ஒரு நிலநடுக்கத்துடன் துவக்கி, 'கிளைமாக்ஸ்'க்கு (உச்சக் கட்டத்திற்கு) செல்லும்படி கதை சொல்லுங்கள்" (We want a story that starts out with an earthquake and works its way up to a climax. - Samuel Goldwyn) என்று கூறினார். பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் எவ்விதம் உரை வழங்குவது என்ற தலைப்பில் டிம் ஸ்டாக்கில் (Tim Stockil) என்பவர், 2013ம் ஆண்டு வெளியிட்ட ஒரு நூலுக்கு, "Start with an Earthquake" - அதாவது, "ஒரு நிலநடுக்கத்துடன் துவக்குங்கள்" என்று தலைப்பிட்டுள்ளார். கதையோ, உரையோ எவ்விதம் துவங்குகிறது என்பதைப் பொருத்து, அதன் ஈர்ப்பு சக்தி, கூடும் அல்லது குறையும்.

கதை சொல்லும் கலையில் ஈடு இணையற்றவராக இயேசு விளங்கினார் என்பது, இறையியல் அறிஞர்கள் மத்தியில் மட்டுமல்ல, இலக்கியயியல் அறிஞர்கள் மத்தியிலும் நிலவும் கருத்து. Thomas Alexander Hyde  என்ற புகழ்பெற்ற போதகர், 1893ம் ஆண்டு வெளியிட்ட ஒரு நூலுக்கு, "Christ the Orator", அதாவது, "பேச்சாளரான கிறிஸ்து" என்று தலைப்பிட்டார். இந்தத் தலைப்பை மேலும் வலியுறுத்த, அவர், நற்செய்தியின் ஒரு கூற்றை, உபதலைப்பாகத் தந்தார். "அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை" (யோவான் 4:46) என்பதே அந்த உபதலைப்பு. இந்தக் கூற்று இயேசுவின் சீடர்களாலோ அவரை விரும்பித் தேடியவர்களாலோ சொல்லப்படவில்லை. மாறாக, அவரை கைது செய்யச் சென்ற வீரர்களால் சொல்லப்பட்டது. இந்தச் சூழலை, நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு விவரிக்கின்றார்:

யோவான் நற்செய்தி 7:44-46

சிலர் இயேசுவைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை. தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள். காவலர் மறுமொழியாக, “அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர்.

கதை வடிவில் இயேசு கூறிய உவமைகள் என்ற கடலில் கடந்த ஈராண்டுகளாக நாம் கரைந்து வருகிறோம். அந்தக் கடலின் ஒரு துளியான 'இரு புதல்வர்கள் உவமை'யில் மூன்றாவது வாரமாக நம் தேடல் தொடர்கிறது. கதை சொல்லும் கலையில் இயேசு சிறந்தவர் என்பதை, இவ்வுவமையின் ஆரம்ப வரிகள் தெளிவாக்குகின்றன.

பொதுவாக, ஒரு கதையை, "ஓர் ஊரில் ஒரு இராஜா இருந்தார்" என்ற பாணியில்  துவக்கி, கேட்பவரின் கவனத்தை ஈர்க்க முயல்வோம். அதே கதையை, "உங்களில் ஒருவர் இராஜாவாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்" என்று துவக்கினால், கதையின் நாயகனாக நம்மையேக் கற்பனை செய்துகொள்ளத் தூண்டும் இத்தகைய அறிமுகத்தால், நமது ஆர்வமும், ஈடுபாடும் அதிகமாகும். இந்தப் பாணியில், இயேசு கூறிய உவமைகளை நாம் லூக்கா நற்செய்தியில் வாசித்திருக்கிறோம்.

மேலும் இயேசு அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். (லூக்கா 11:5-6) என்ற அறிமுக வார்த்தைகளுடன் 'நள்ளிரவில் வந்த நண்பர்' என்ற உவமையை இயேசு ஆரம்பித்தார்.

“உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?” (லூக்கா 15:4) என்ற கேள்வியுடன் 'காணாமற்போன ஆடு' என்ற உவமையை இயேசு துவக்கினார். தன்னைச் சுற்றியிருந்தோரைக் கவர்ந்திழுக்க இயேசு பயன்படுத்திய இந்த அறிமுக வரிகளைப் போல, 'இரு புதல்வர்கள் உவமை'யையும் இயேசு அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார்” (மத்தேயு 21:28) என்ற அறிமுகத்தின் வழியே, தன்னைச் சுற்றியிருந்தோரின், குறிப்பாக, தன்னைக் கேள்விகளால் மடக்க நினைத்த மதத் தலைவர்களின் கவனத்தைக் கட்டியிழுக்க, ஒரு கேள்வியுடன் தன் கதையை ஆரம்பித்தார் இயேசு. உவமையின் இறுதியில், “இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” (மத்தேயு 21:31) என்ற கேள்வியைத் தொடுத்து, தன்னைச் சுற்றியிருந்தோரை மீண்டும் இந்த உவமைக்குள் ஈடுபடுத்தினார்.

“எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று இயேசு எழுப்பிய இக்கேள்வி, வாழ்வின் சில எதார்த்தங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற விருப்பமில்லை என்று முதலில் சொன்ன மூத்தவர், இறுதியில் அவர் விருப்பத்தை நிறைவேற்றினார். இவரை, 'செயல் வீரர்' என்று நாம் அழைக்கலாம். "நான் போகிறேன் ஐயா" என்று தேனொழுகச் சொல்லிவிட்டு, ஒன்றும் செய்யாத மற்றொரு மகனை, 'வாய்ச்சொல் வீரர்' என்று அழைக்கலாம்.

'செயல் வீரர்', 'வாய்ச்சொல் வீரர்' என்ற இவ்விரு பிரிவினரையும் நாம் வாழ்வில் சந்தித்திருக்கிறோம். எவ்வித ஆர்ப்பாட்டமும், விளம்பரமும் இல்லாமல், செயல்களில் ஈடுபடுவோரையும், இதற்கு மாறாக, நிறையப் பேசி, குறைவாகச் செயலாற்றுவோரையும் எண்ணிப் பார்க்கும்போது, உருவகச் செறிவு நிறைந்த, "நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்" என்ற நம் பழமொழி நினைவுக்கு வருகிறது.

இயேசுவும், பல தருணங்களில் இவ்விரு பிரிவினரைப் பற்றி, குறிப்பாக, ‘வாய்ச்சொல் வீரர்’களைப் பற்றிப் பேசியிருக்கிறார். மலைப்பொழிவின் ஒரு பகுதியில், வாய்ச்சொல் வீரர்களைப் பற்றி இயேசு கூறும் எச்சரிக்கை இவ்விதம் ஒலிக்கிறது:

மத்தேயு 7:21

என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

வாய்ச்சொல் வீரர்களாக வாழ்ந்த தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும் இறைவனின் விருப்பத்தைச் செயலாக்காமல், வெறும் வார்த்தைகளில் மட்டும் இறைவனை அழைத்துவிட்டு, தங்கள் சுய விருப்பத்தை நிறைவேற்றினர். இவர்களைக் குறித்து, இயேசு இவ்விதம் பேசுகிறார்:

மத்தேயு 7:22-23

அந்நாளில் பலர் என்னை நோக்கி,  “ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?” என்பர். அதற்கு நான் அவர்களிடம், “உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்” என வெளிப்படையாக அறிவிப்பேன்.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இறைவார்த்தையைக் கேட்டு செயல்படுவோர், செயல்படாதவர் என்ற இருவகையினரை, அழகிய இரு உருவகங்களால் இயேசு விவரிக்கிறார்:

மத்தேயு 7: 24-27

“ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.” 

'செயல் வீரர்', 'வாய்ச்சொல் வீரர்' என்ற அடைமொழிகளை, அடையாளங்களைக் கேட்டதும், நம் மனக்கண்களில் பலர் ஊர்வலமாகச் சென்றிருப்பர். குறிப்பாக, வார்த்தை விளையாட்டில் வாழ்வின் பெரும்பகுதியை வீணடித்து, மக்களின் வாழ்வையும் விலைபேசும் அரசியல் தலைவர்களை 'வாய்ச்சொல் வீரர்கள்' என்று முடிவெடுத்து, முத்திரை குத்தியிருப்போம்.

ஒரு விரல் கொண்டு மற்றவர்களைச் சுட்டிக் காட்டும்போது, ஏனைய மூன்று விரல்கள் நம்மை நோக்கித் திரும்பியிருப்பதைப் பார்க்கவேண்டும். அடுத்தவரை முத்திரை குத்தும் பொழுதுபோக்கிலிருந்து விடுபட்டு, ஓர் ஆன்மீகச் சோதனையை மேற்கொண்டால், நமக்குள்ளேயே செயல்வீரர்களும், வாய்ச்சொல் வீரர்களும் அணிவகுத்து நிற்பதைக் காணலாம்.

வாய்ச்சொல் வீரர்களைப் பற்றி, மகாகவி பாரதியார் சொன்ன வரிகள் நமது அரசியல் தலைவர்களுக்கு அதிகமாகப் பொருந்தும் என்று எண்ணும் அதேவேளையில், அத்தகைய மனநிலையும், எண்ண ஓட்டங்களும் நம்மில் உருவாகியுள்ளனவா என்ற ஆன்மீக ஆய்விலும் ஈடுபடுவோம்.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,

வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே!

வாய்ச் சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி,

நாட்டத்தில் கொள்ளாரடீ! – கிளியே!

நாளில் மறப்பாரடீ

சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடீ! – கிளியே!

செம்மை மறந்தாரடீ!

பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல்

துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் – கிளியே!

சோம்பிக் கிடப்பாரடீ!

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார்

வாயைத் திறந்து சும்மா – கிளியே!

வந்தே மாதர மென்பார்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.