2015-04-21 15:22:00

மறைசாட்சியம் நன்மை,தீமையைப் பிரித்துப் பார்க்க அழைக்கிறது


ஏப்.21,2015. துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களின் குருதி, நன்மையையும் தீமையையும் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று நம் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய அரசால் 28 எத்தியோப்பியக் கிறிஸ்தவர்கள் லிபியாவில் படுகொலை செய்யப்பட்ட காணொளிகள் கடந்த ஞாயிறன்று வெளியானதையடுத்து,   எத்தியோப்பிய Tewahedo ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை Abune Mathias  அவர்களுக்கு, தனது தோழமை உணர்வைத் தெரிவிக்கும் செய்தியை அனுப்பியுள்ள  திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த 28 எத்தியோப்பிய ஏழை கிறிஸ்தவ குடியேற்றதாரர்கள் இரு குழுக்களாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். லிபியாவின் கிழக்குக் கடற்கரையில் 15 பேர் தலைவெட்டப்பட்டும், லிபியாவின் தெற்கில் பாலைநிலத்தில் 15 பேர் சுடப்படும் இறந்துள்ளனர். இக்காணொளிகள், “சிலுவையின் நாட்டுக்கு” என்று முகவரியிடப்பட்டுள்ளன.

இவ்வன்முறை, ஆழ்ந்த கவலையையும், கடும் வேதனையையும் அளித்துள்ளது எனவும், லிபியாவில் அப்பாவி கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேலும் அதிர்ச்சியூட்டும் வன்முறைகள் நடத்தப்படுவதைத் தான் கேள்விப்படுவதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்படி கொலைசெய்யப்படுவோர் கத்தோலிக்கரா, காப்டிக் கிறிஸ்தவரா, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரா, பிரிந்த கிறிஸ்தவ சபையினரா என்பது அல்ல, இவர்களின் இரத்தம் கிறிஸ்துவை அறிவிப்பதில் ஒன்றே எனவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

40 விழுக்காட்டுக்கு மேற்பட்ட ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் வாழும் எத்தியோப்பியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம்கள்.

ஆதாரம்  : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.