2015-04-21 15:37:00

மரியா திருவுருவ அழிப்பு, சமயச்சார்பற்ற அமைப்புக்கு காயம்


ஏப்.21,2015. இந்தியாவின் ஆக்ராவில் அன்னைமரியா மற்றும் குழந்தை இயேசு திருவுருவங்கள் உடைக்கப்பட்டு இத்தனை நாள்கள் ஆகியும் அக்குற்றம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கவலை தெரிவித்துள்ளனர் இந்தியக் கிறிஸ்தவர்கள்.

காவல்துறை குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இருப்பது, கிறிஸ்தவர்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்திருப்பதாகவும், சமயத் தீவிரவாதிகள் கிறிஸ்தவ சமூகத்தைக் குறிவைத்து தாக்குகின்றனர் எனவும் இந்தியக் கிறிஸ்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இம்மாதம் 16ம் தேதி காலையில், ஆக்ராவின் Pratappuraவில் புனித மரியா ஆலய வளாகத்திலிருந்த திருவுருவங்கள் அவமானப்படுத்தப்பட்டு உடைக்கப்பட்டிருப்பது குறித்து கண்டனம் தெரிவித்த இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இந்த நாசவேலை, ஒரு சமுதாயத்தின் சமயச்சார்பற்ற கட்டமைப்பைக் காயப்படுத்துவதாக உள்ளது என்று கூறினார்.

இச்செயல், சமய உணர்வுகளைப் புண்படுத்துகின்றது என்றும், இது இந்திய அரசியல் அமைப்பின் சமயச்சார்பற்ற தன்மைமீது இடப்பட்டுள்ள ஆழமான கறை என்றும் முன்னாள் ஆக்ரா பேராயரான கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.