2015-04-21 15:50:00

குடியேற்றதாரர்கள் உயிரிழப்பு ஒரு மனிதக்கொலை, வழக்குப் பதிவு


ஏப்.21,2015. லிபியக் கடற்பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவில் ஏறக்குறைய 900 குடியேற்றதாரர்கள் இறந்துள்ளதாக அஞ்சப்படும்வேளை இதனை ஒரு மனிதக்கொலை விவகாரமாக, மனித வர்த்தகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர் இத்தாலிய அதிகாரிகள்.

நூற்றுக்கணக்கான குடியேற்றதாரரை ஏற்றிவந்த படகு விபத்துக்குள்ளாவதற்கு மனித வர்த்தகர்களே பொறுப்பு என்று சொல்லி இத்தாலிய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இவ்விபத்து குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள், இந்தப் பேரிடர், உலகளாவிய மனசாட்சியை அதிர்ச்சிப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மத்தியதரைக் கடலில் அதிகரித்துவரும் உயிரிழப்புகள் குறித்தும், அதனால் எழுந்துள்ள மோசமான நெருக்கடிநிலை குறித்தும் விவாதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புக் கூட்டம் ஒன்று வருகிற வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

கடலைக் கடக்க முயற்சிக்கும்போது, நூற்றுக்கணக்கானோர் பலியாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐரோப்பிய அவையின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்திருந்தாலும் பிரச்சனைகளுக்கான மூல காரணிகளுக்கு உடனடித் தீர்வுகள் எதுவுமில்லை எனவும் எச்சரித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவில் மத்தியதரைக்கடலில் மூழ்கிய குடியேற்றதாரர்கள் பயணித்த கப்பல், எகிப்திலிருந்து பயணிகளுடன் வந்து மீண்டும் டிரிப்போலியில் புதிதாகப் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. மாலி, காம்பியா, செனெகல், எரிட்ரியா, பங்களாதேஷ், சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பயணம் செய்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.