2015-04-20 15:34:00

மறைசாட்சிகளின் சாட்சிய வாழ்வு நமக்கு உதவுகிறது - திருத்தந்தை


ஏப்.20,2015. நம் விசுவாசத்தை அதிகாரமாக மாற்றும் சோதனையிலிருந்து நம்மைக் காப்பாற்ற, மறைசாட்சிகளின் சாட்சிய வாழ்வு நமக்கு உதவுகிறது என தன் திங்கள் காலை மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனுக்காக நாம் ஆற்றும் உண்மையான பணியைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், பொருளாதார காரணங்களுக்காகவும் உலக அதிகாரங்களுக்காகவும் இறைவனைப் பின்பற்றமுயலும் சோதனைகள் பலருக்கு எழுகின்றன என்றார்.

எழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைப்பட்டோருக்கு விடுதலை வழங்கவும், விழியிழந்தோருக்கு பார்வை அளிக்கவும், ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வை வழங்கவும் நாம் கொண்டுள்ள பணியின் நோக்கம், காலப்போக்கில் தேய்ந்து, அதிகாரம் குறித்த முக்கியத்துவம் இடம்பெறும் ஆபத்து உள்ளது என்றார் திருத்தந்தை.

இயேசுவுக்கு பாலைவனத்தில் ஏற்பட்ட மூன்று சோதனைகள் போல், பலருக்கு வாழ்வில் இடம்பெறுகிறது எனவும் உரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சோதனைகளுக்கு உட்படுவோர், வெளியில் கிறிஸ்தவர்கள்போல் தோற்றமளித்தாலும், உள்ளுக்குள் ஆசைகளால் ஆளப்பட்டு வெளிவேடதாரிகளாக வாழ்கின்றனர் என்றார்.

அத‌ற்கு மாறாக‌, இறை அருளின் ஆண்டை அறிவிப்ப‌வ‌ர்க‌ளாக‌ நாம் முன்னோக்கி ந‌டைபோடும்போது, இறைவ‌னும் த‌ம் ம‌றைசாட்சிக‌ளின் சாட்சிய‌ங்க‌ளோடு, ந‌ம்மோடு ந‌டைபோடுகிறார் என‌வும் த‌ன் ம‌றையுரையில் எடுத்துரைத்த‌ திருத்தந்தை, க‌ட‌வுளால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ இறைம‌க‌னில் ந‌ம்பிக்கைக்கொள்வ‌தே, இறைவ‌னின் ப‌ணிக‌ளை நிறைவேற்றுவ‌தாகும் என‌வும் கூறினார்.

உல‌காயுத‌ப் போக்குக‌ளில் ம‌னித‌ர்க‌ள் த‌ங்க‌ளை இழ‌ந்துவிடாம‌ல் இருப்ப‌த‌ற்குத் தேவையான அருளை அனைவ‌ருக்கும் வ‌ழ‌ங்குமாறு செபித்து த‌ன் ம‌றையுரையை நிறைவுச்செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.