2015-04-20 16:06:00

திருத்தந்தை - கிறிஸ்தவர்கள் சான்று வாழ்வு வாழ வேண்டும்


ஏப்.20,2015.  இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒவ்வொருவரும் உயிர்த்த கிறிஸ்துவுக்குச் சான்று பகர வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்கள் குறித்த சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இயேசு உயிர்த்து நம் மத்தியில் பிரசன்னமாய் இருக்கிறார் என்பதற்கு வார்த்தையாலும், வாழ்வாலும், திருஅவை, இக்காலத்தில் தொடர்ந்து சாட்சி சொல்லவேண்டிய கடமையைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

நம் சான்று வாழ்வின் சாரம், இறையியலாகவோ, கோட்பாடாகவோ இல்லை, ஆனால் இது மீட்பின் செய்தி, தெளிவான நிகழ்வு, ஒரு மனிதரைப் பற்றிய, உயிர்த்த கிறிஸ்து பற்றிய செய்தி என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருளடையாளங்கள் மற்றும் ஒப்புரவு அருளடையாளத்தைத் தொடர்ந்து பெறுவதன் வழியாக, திருஅவையிலும் செபத்திலும் கிறிஸ்து அனுபவம் பெறுபவரால் கிறிஸ்துவுக்குச் சாட்சி சொல்லமுடியும் என்றும், நற்செய்தியை மகிழ்வோடும், துணிச்சலோடும், கருணை, கனிவு மற்றும் அமைதியோடும் வாழும்போது இந்தச் சாட்சிய வாழ்வு அதிக நம்பக்கூடியதாய் இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தற்பெருமை, தன்னலம், நுகர்வு ஆகியவற்றை ஒருவர் சார்ந்து இருக்கும்போது எவ்வாறு உயிர்த்த கிறிஸ்துவையும், அவரின் மீட்பளிக்கும் சக்தியையும் அறிவிக்க முடியும்? என்ற கேள்வியையும் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எழுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.