2015-04-20 16:14:00

குடியேற்றதாரர் இறப்புகள் மேலும் இடம்பெறாமல் தடுக்க அழைப்பு


ஏப்.20,2015. குடியேற்றதாரர்களை ஏற்றி வந்த படகு ஒன்று லிபியாக் கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகி, நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கி இறந்துள்ளவேளை,  இத்தகைய துன்ப நிகழ்வுகள் இனிமேலும் நிகழாவண்ணம் தடைசெய்வதற்கு அனைத்துலக சமுதாயம் உடனடியாக, உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விபத்தில் காணாமல் போயுள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

"குடியேற்றதாரர்களும் நம்மைப் போன்ற ஆண்களும் பெண்களுமே. இவர்கள் போர்களுக்குப் பலியானவர்கள், நசுக்கப்பட்டு, காயப்பட்டு, பயன்படுத்தப்பட்டு பசித்திருப்பவர்கள். நல்லதொரு வாழ்வைத் தேடியவர்கள். மகிழ்வைத் தேடியவர்கள். இந்த நம் சகோதர சகோதரிகளுக்காக நாம் அனைவரும் முதலில் அமைதியாகவும், பின்னர் சேர்ந்தும் செபிப்போம்”என்றும் கூறினார் திருத்தந்தை.

700க்கும் மேற்பட்ட குடியேற்றதாரர்களை ஏற்றி வந்த இருபது மீட்டர் நீளமான படகு ஒன்று, இத்தாலியின் Lampedusa தீவுக்குத் தெற்கே, லிபியாக் கடற்பகுதியில் சனிக்கிழமை, நள்ளிரவில் நீரில் கவிழ்ந்தது. இதில் குறைந்தது 650 பேராவது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. இதுவரை 50 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

2014ம் ஆண்டு தொடக்க முதல் ஏறக்குறைய இரண்டு இலட்சம் குடியேற்றதாரரை இத்தாலி காப்பாற்றியுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.