2015-04-20 15:43:00

Gabon நாட்டின் ஆயர்களுக்கு, திருத்தந்தையின் ‘அட்லிமினா’ உரை


ஏப்.20,2015. ஆப்ரிக்காவில், அமைதி, மகிழ்வு மற்றும் மீட்பைக் கொணரும் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 170ம் ஆண்டைச் சிறப்பித்துவரும் Gabon நாட்டின் ஆயர்களை, இத்திங்களன்று, திருப்பீடத்தில் சந்தித்து, தன் வாழ்த்துக்களை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் ‘அட்லிமினா’ சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருக்கும் Gabon நாட்டு ஆயர்களைச் சந்தித்தத் திருத்தந்தை, உண்மையான சகோதரத்துவம் மற்றும் செபத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்தியம்பினார்.

கத்தோலிக்க திருஅவை, தான் வாழும் நாடுகளில் அந்தந்த பகுதி மக்களின் தேவைகளில் அதிகக் கவனம் செலுத்திவருவதைக் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீதியும், உடன்பிறந்த உணர்வும் நிறைந்த உலகை கட்டியெழுப்புவதில், ஒவ்வொரு கிறிஸ்தவரும், தங்களை அர்ப்பணிக்க வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.

குருமாணவர்களுக்கான பயிற்சி, துறவுசபைகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பு, ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையிலும் சமூகத்திலும் சேவைச் செய்வதற்கான பொதுநிலையினரின் பங்கேற்பு ஊக்குவிக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சமூகங்களின் வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்தியுள்ள கத்தோலிக்கர்களால் Gabon நாட்டில் திருஅவை உயிர்துடிப்புடையதாக இருப்பது குறித்தும் ஆயர்களிடம் தன் மகிழ்ச்சியை வெளியிட்டத் திருத்தந்தை, அந்நாட்டில் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களின் சிறப்புப் பங்களிப்பையும் பாராட்டினார்.

ஏழைகளின் தேவைகளுக்கு முதலிடம் கொடுக்கும் அதேவேளையில், மனித வாழ்வையும் வாழ்வின் புனிதத்துவத்தையும் காப்பதற்காக, குரல் எழுப்புவதற்கு Gabon ஆயர்கள் தயங்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். 

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.