2015-04-18 15:25:00

ரப்பர் தேவையால் தென்கிழக்கு ஆசியக் காடுகளுக்கு ஆபத்து


ஏப்.18,2015. உலகில் அதிகரித்துவரும் வாகன சக்கரங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, தென்கிழக்கு ஆசியாவில் பாதுகாக்கப்பட்டுவரும் காடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அது ஒரு சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் எனவும் ஓர் ஆய்வு எச்சரித்துள்ளது.

உலகில் வாகன சக்கரங்களுக்கான தேவையை நிறைவேற்றுவதற்கு, 2024ம் ஆண்டுக்குள் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் ஏறக்குறைய 85 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு தேவைப்படும் என இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியலாளர்களின் ஆய்வறிக்கை கூறுகின்றது.

இந்த அளவுக்கு நிலம் ரப்பர் தோட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், அழிந்து வரும் உயிரினங்களான, கிப்பன் வகைக் குரங்குகள், வௌவால்கள், பறவைகள் மற்றும் சில பூச்சியினங்களுக்கும் அது பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும், நிலத்தடி நீர் மற்றும் ஆறுகளையும் மாசுபடுத்தும் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

சிறிது உயரமான பகுதிகளில் வளரும் ரப்பர் மரங்களில் இருந்து எடுக்கப்படும் பால் போன்ற திரவத்தைக் கொண்டு ரப்பர் தயாரிக்கப்படுகிறது. ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப்படுவதற்காக பல இடங்களில் மலைக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

உலக ரப்பர் உற்பத்தியில் 70 விழுக்காடு, வாகன சக்கரங்களுக்கென செலவழிக்கப்படுகிறது.

ஆதாரம் : பிபிசி /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.