2015-04-18 15:07:00

சிறுபான்மை மதத்தவர் சந்திக்கும் வேதனைகள் உணரப்பட வேண்டும்


ஏப்.18,2015. மத்திய கிழக்கிலும், உலகின் ஏனைய பகுதிகளிலும் வாழும் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மை மதத்தவரின் வலிகளும், துன்பங்களும், உயிர்வாழ்வுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் பயங்களும் தெளிவான செயல்களால் உண்மையிலேயே உணரப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

“உலக அளவில் கிறிஸ்தவர்கள் நசுக்கப்படுதல்:அனைத்துலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெற்ற அமர்வில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

நசுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் துன்பநிலைகள், அம்மக்கள் மேலும் தாக்குதலுக்கும் உரிமை மீறலுக்கும் பலியாகாவண்ணம் தடுப்பதற்கு அழைப்பு விடுக்கின்றது என்றும் பேராயர் கூறினார்.

தாராளமயமாக்கப்பட்ட இவ்வுலகை வளப்படுத்தும் ஒரு முயற்சியாக, மத மற்றும் இனப் பன்மைத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைதியான நல்லிணக்கக் கலாச்சாரத்தை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறும் பேராயர் அவுசா அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

2012ம் ஆண்டு அக்டோபர் முதல் 2014ம் ஆண்டு ஜூன்வரையுள்ள நிலவரப்படி, உலகில் சமய அடக்குமுறை 116 நாடுகளில், அதாவது 59 விழுக்காட்டு நாடுகளில் மிகவும் கவலைதரும் நிலையில் உள்ளது, ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 151ல் கிறிஸ்தவர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர் என்ற புள்ளி விபரங்களையும் பேராயர் அவுசா அவர்கள் தெரிவித்தார்.

கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல தடவைகள் கவலை தெரிவித்துள்ளார், இன்றைய உலகில் 10 கோடி முதல் 15 கோடி வரையிலான கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்றும் கூறினார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.