2015-04-18 15:02:00

சிகாகோ முன்னாள் பேராயர் கர்தினால் ஜார்ஜ் மறைவு


ஏப்.18,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ் அவர்கள் உயிரிழந்ததை முன்னிட்டு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிகாகோ உயர்மறைமாவட்ட பேராயர் Blase Joseph Cupic அவர்களுக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், கர்தினால் ஜார்ஜ் அவர்கள் தலத்திருஅவைக்கும், அகிலத் திருஅவைக்கும் ஆற்றியுள்ள நற்பணிகளுக்கு நன்றி தெரிவித்து, அவரின் ஆன்மா நிறை சாந்தி அடையத் தான் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

78 வயதாகும் சிகாகோ உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயராகிய கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ் அவர்கள், நீண்ட காலம் புற்றுநோயால் துன்புற்று இவ்வெள்ளியன்று இறைவனடி எய்தினார்.

கர்தினால் ஜார்ஜ் அவர்களின் மறைவோடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 223 ஆகவும், இவர்களில் 80 வயதுக்குட்டபட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆகவும் மாறியது.

கர்தினால் ஜார்ஜ் அவர்கள், அமைதி, மனஉறுதி மற்றும் துணிச்சல் மிக்க ஒரு மனிதர் என்றும், அவர் தனது பணியில் எப்போதும் திருஅவையின் நலன் மற்றும் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்தவர் என்றும் பாராட்டியுள்ளார் தற்போதைய சிகாகோ பேராயர் Blaise Cupich.

அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த கர்தினால் ஜார்ஜ் அவர்கள், 1997ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை சிகாகோ உயர்மறைமாவட்ட பேராயராக பணியாற்றினார். 1843ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சிகாகோ மறைமாவட்டத்தில் 23 இலட்சத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர்.

மேலும், கர்தினால் ஜார்ஜ் அவர்களின் மறைவுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்களும், தனது இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.