2015-04-18 15:14:00

இந்திய காரித்தாஸ்-ஏழை விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்


ஏப்.18,2015. வேளாண்மையில் சரியான முறைகளைக் கையாள்வதன் மூலம் ஏழை விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலையை முன்னேற்றும் விதமாக, மேற்கு வங்காளத்தில் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது இந்திய காரித்தாஸ் நிறுவனம்.

இத்திட்டத்தை கொல்கத்தாவில் தொடங்கி வைத்து உரையாற்றிய இந்திய காரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருள்பணி ஃபிரட்ரிக் டி சூசா அவர்கள், உறுதியான வளர்ச்சிக்கும் வளமைக்கும் இந்தியா கொண்டுள்ள இரகசியம், கிராமப்புற இந்தியாவில் வேளாண் துறையை வாழ வைப்பதில் உள்ளது என்று கூறினார்.

சிறு விவசாயிகள் மத்தியில் வாழ்வாதாரங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கூறிய இந்திய காரித்தாஸ் இயக்குனர், வேளாண் உற்பத்தி மற்றும் வாழ்வாதாரங்களை 2017ம் ஆண்டுக்குள் ஐம்பது விழுக்காடு அதிகரிப்பது இப்புதிய திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.

இத்தகைய திட்டத்தை, இவ்வாண்டில் தெலுங்கானாவில் தொடங்கியுள்ள இந்திய காரித்தாஸ் நிறுவனம், வருகிற மே மாதம் 8ம் தேதி கர்நாடகாவிலும் ஆரம்பிக்கவுள்ளது.

இவ்வாண்டு இந்திய அரசு, வேளாண் துறைக்கு ஒதுக்கிய நிதி, கடந்த மூன்று ஆண்டுகளில் மிகக் குறைவே என்று ஊடகங்கள் கூறுகின்றன. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.