2015-04-17 15:36:00

பாப்பிறை பிறரன்பு நிறுவனத்தின் உதவிகளுக்கு திருத்தந்தை நன்றி


ஏப்.17,2015. பாப்பிறை பிறரன்பு நிறுவனம் செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள், மனிதக் குடும்பத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் திருஅவையின் இடைவிடா முயற்சிகளுக்குச் சான்றாக உள்ளன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளம் அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினரின் கல்விக்கும், பயிற்சிக்கும் உதவி வரும் பாப்பிறை பிறரன்பு நிறுவனத்தின் உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களின் தியாகம் நிறைந்த தாராளப் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இரக்கத்தின் ஜூபிலி ஆண்டுக்காகத் திருஅவை தன்னைத் தயாரித்துவரும்வேளை, வானகத் தந்தையின் இரக்க முகமாகிய இயேசு கிறிஸ்து, இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் தமது பல்வேறு கொடைகளால் நிரப்ப வேண்டுமென்று தான் செபிப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1988ம் ஆண்டில் பிலடெல்ஃபியாவில் தொடங்கப்பட்ட பாப்பிறை நிறுவனம், திருத்தந்தையின் பிறர்நலத் திட்டங்களுக்கு உதவி வருகிறது. இதுவரை ஏறக்குறைய 22 கோடி டாலர் நிதியை திருத்தந்தைக்கு வழங்கியுள்ளது. அத்துடன், இளம் அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினரை உருவாக்கும் பயிற்சிக்கும், கல்விக்குமென ஏறக்குறைய 11 கோடியே 10 இலட்சம் டாலரையும் உதவியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.