2015-04-17 15:50:00

கிறிஸ்தவத் தாழ்மை தனது துன்பவேதனையில் திருப்தி அடைவதல்ல


ஏப்.17,2015. தான் தாழ்த்தப்படுவதை ஒருவர் விரும்பி ஏற்பது, அவர் தனது வேதனையிலேயே மகிழ்வு காண்பதாகும், ஆயினும், நற்செய்தியின் பெயரில் துன்பங்களை ஏற்றுத் தாங்கும்போது அது இயேசுவைப் போல் நம்மை ஆக்குகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தியை அறிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தப்பட்ட திருத்தூதர்கள் பேசுவதைக் கேட்க விரும்பாத திருச்சட்ட அறிஞர்கள் பற்றி விவரிக்கும் இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தை (தி.பணி.5,34-42) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

கிறிஸ்தவர்கள் தங்களில் ஒருபோதும் வெறுப்புணர்வை பேணி வளர்க்கக் கூடாது என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, கடவுளைப் பிரியப்படுத்தும் அன்பு மற்றும் உரையாடல் உணர்வுகளையும், எண்ணங்களையும் தங்களில் கண்டுணர வேண்டுமென்று கூறினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு உரைத்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் உணர்வுகளால் நாம் ஊடுருவப்படுவதற்கு நம்மையே அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

நாம் பிறர் பற்றி மோசமான எண்ணங்களையும், உணர்வுகளையும், வெறுப்பையும், மனக்கசப்பையும் கொண்டிருக்கும்போது அவைகள் நம்மில் வளரவிடாமல் தடுப்பதற்கு நேரம் செலவழிக்க வேண்டும், உணர்ச்சிகளுக்கு வழிவிடாமல் கால அவகாசம் கொடுத்துச் செயல்படும்போது காரியங்களை சரியான ஒளியில் பார்க்க முடியும் எனவும் கூறினார் திருத்தந்தை.

மனவெறுப்பை நம்மில் பேணி வளர்க்கும்போது அவை நம்மிலிருந்து வெடிப்பது தவிர்க்க முடியாதது, அப்போது நாம் இறைவனுக்கு எதிராகப் போராடுகிறோம், ஆனால், கடவுள் பிறரை அன்பு கூருகிறார், நல்லிணக்கத்தை, அன்பை, உரையாடலை அன்பு கூருகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.