2015-04-16 16:40:00

போரில் 'ரோபோ'க்களின் பயன்பாடு ஆபத்தானது - பேராயர் தொமாசி


ஏப்.16,2015. நாடுகளுக்கிடையிலும், நாட்டிற்குள்ளும் மோதல்கள் நடைபெறும் வேளையில், கணணி உதவியுடன் செயலாற்றும் 'ரோபோ'க்களின் பயன்பாடு அதிகரித்து வருவதை கவனத்துடன் கண்காணிக்கும் பொறுப்பில் நாம் இருக்கிறோம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், Lethal Autonomous Weapon Systems (CCW) அதாவது, ஆபத்துக்கள் நிறைந்த, தன்னிச்சையாக இயங்கும் போர்க்கருவி முறைகள் என்ற தலைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

மனிதர்களால் உருவாக்கப்படும் இந்தக் கருவிகள், மனிதர்களின் கட்டுப்பாட்டையும் தாண்டி பயன்படுத்தப்படுவது, நன்னெறியின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டிய ஒரு விவாதம் என்று பேராயர் தொமாசி அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

போர்க்களம் என்று வரையறுக்கப்பட்ட ஓர் எல்லை எதுவும் இல்லாமல், இன்று நடைபெறும் மோதல்கள், நகரங்களில், மக்கள் குடியிருப்புக்களைச் சுற்றி நடைபெறுவதால், தன்னிச்சையாக இயங்கும் ஆபத்தான 'ரோபோ' கருவிகளின் பயன்பாடு இன்னும் பெரும் கேள்விக்குள்ளாகின்றது என்று பேராயர் தொமாசி அவர்கள் சுட்டிக் காட்டினார்.

போர்க்கருவிகளைப் பயன்படுத்தும் மனிதர்கள் கொல்லப்படுகின்றனர் என்ற காரணத்தால், 'ரோபோ' கருவிகளைப் பயன்படுத்தும்போது, அவை தன்னிச்சையாகச் செயல்பட்டு, அப்பாவி மனித உயிர்களைப் பறிப்பது, எவ்வகையிலும் நியாயமாகாது என்பதை பேராயர் தொமாசி அவர்கள் இக்கருத்தரங்கில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.