2015-04-16 16:48:00

பாலியல் கொடுமைகள், போரின் யுக்தியாக மாறுவது, பெரும் அநீதி


ஏப்.16,2015. போர்களில் ஈடுபடும் பல குழுக்கள், பெண்களைப் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குவதை போரின் ஒரு யுக்தியென்று பயன்படுத்துவது பெரும் அநீதி என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"பெண்கள் அமைதி பாதுகாப்பு" என்ற மையக்கருத்தில், ஐ.நா.வின் பாதுகாப்பு அவை, இப்புதனன்று, நியூயார்க் நகரில் நடத்திய ஒரு கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

மனிதர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து வன்முறைகளும் அநீதியானவை, அவற்றில், பெண்களுக்கு எதிராக மேற்கொள்ள்ளப்படும் பாலியல் வன்கொடுமைகள் மிகக் கொடுமையானவை; நீண்ட கால பாதிப்பை உருவாக்குபவை என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

அவரவர் மத உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அடுத்தவர் மத உணர்வுகளை சற்றும் மதிக்காமல், தாக்குதல் இலக்குகளாக வேற்று மதத்தினரைப் பயன்படுத்தும் கொடுமைகள், அண்மைய மோதல்களில் வெளிப்படுவது, மிகுந்த கவலையைத் தருகிறது என்று பேராயர் அவுசா அவர்கள் எடுத்துரைத்தார்.

மோதல்கள் நிகழும்போது, பெண்கள் தாக்கப்படுவதிலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, மோதல்களைத் தீர்ப்பதிலும் பெண்களின் பங்கு முக்கியம் என்பதை உணரவேண்டும் என்பதிலும் திருஅவை முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.