2015-04-16 16:18:00

கென்யா ஆயர்களுக்கு திருத்தந்தையின் 'அத் லிமினா' உரை


ஏப்.16,2015. ஆப்ரிக்காவிலிருந்து உரோம் நகருக்கு வந்து பயிலும் குருமாணவர்களும், உங்கள் நாட்டில் பயிலும் குருமாணவர்களும் இறைவனின் அளவற்ற நன்மைத்தனத்தின் அடையாளங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல பகுதிகளிலிருந்து 'அத் லிமினா' சந்திப்பை மேற்கொள்ளும் ஆயர்கள் வரிசையில், உரோம் நகருக்கு வருகை தந்துள்ள கென்யா நாட்டு ஆயர்களை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆப்ரிக்க குருமாணவர்கள் எண்ணிக்கையில் வளர்ந்து வருவது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டார்.

அருள் பணியாளராக வாழ தீர்மானிக்கும் ஒவ்வொரு இளம் உள்ளத்திலும், அழைப்பின் விதைகள் அவரவர் வளரும் குடும்பங்களில் முதலில் விதைக்கப்படுகின்றன என்றும், அந்த அழைப்பின் ஆர்வத்தை பயிற்சி இல்லங்கள் பேணி வளர்க்கின்றன என்றும் திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

இறைபணிக்கென தங்களை வழங்கும் இளையோரை பாதுக்காப்பது, ஆயர்களின் முக்கியமான ஒரு பணி என்று கென்யா நாட்டு ஆயர்களிடம் திருத்தந்தை குறிப்பிட்டார்.

அர்ப்பணிக்கப்பட்ட ஆண்டைக் கொண்டாடிவரும் இவ்வேளையில், கென்யா நாட்டில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள இருபால் துறவியருக்கு தன் மனமார்ந்த நன்றியை ஆயர்கள் எடுத்துச் செல்லவேண்டும் என்று திருத்தந்தை விண்ணப்பித்தார்.

வறியோர் சார்பிலும், சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டோர் சார்பிலும் குரல் எழுப்பும் இறைவாக்கினர்களாக செயலாற்றுவதற்கு கென்யா தலத்திருஅவை தயங்கக்கூடாது என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.