2015-04-15 17:19:00

இயேசு சபை கர்தினால் Roberto Tucci – வாழ்க்கைக் குறிப்பு


ஏப்.15,2015. இயேசு சபையைச் சேர்ந்த கர்தினால் ரொபெர்த்தோ துச்சி அவர்கள், ஏப்ரல் 14, இச்செவ்வாய் இரவு, தன் 94வது வயதில், உரோம் நகரில், புனித கனீசியொ இயேசு சபை இல்லத்தில் இறையடி சேர்ந்தார்.

1921ம் ஆண்டு, இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் பிறந்த கர்தினால் துச்சி அவர்கள், தன் 15வது வயதில் இயேசு சபையில் இணைந்து, 29வது வயதில் அருள் பணியாளராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்.

கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்ற துச்சி அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் ஓர் இறையியல் ஆலோசகராகப் பங்கேற்றது மட்டுமல்லாமல், அவ்வேளையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டங்களைத் திறம்பட நடத்தினார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ஏடுகளில் ஒன்றான "இன்றைய உலகில் திருஅவை" (Gaudium et Spes) என்ற ஏடு உருவாக உழைத்தவர்களில், கர்தினால் துச்சியும் ஒருவர்.

திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் மேற்கொண்ட அனைத்து திருத்தூது பயணங்களையும் மிகத் திறமையுடன் ஏற்பாடு செய்த பெருமைக்குரியவர், கர்தினால் துச்சி.

2001ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினாலாக உயர்த்தப்பட்ட அதே நாளில், துச்சி அவர்களும், தன் 80வது வயதில் திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களால், கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

கர்தினால் துச்சி அவர்களின் உடல், இயேசு சபை அகில உலகத் தலைமையகத்தில், இப்புதன் மதியம் முதல், மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது அடக்கச் சடங்கு, ஏப்ரல் 17ம் தேதி பிற்பகல் நடைபெறும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சடங்கில் இறுதிச் செபங்களைச் சொல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.