2015-04-15 17:00:00

அமைதி ஆர்வலர்கள்: 1978ல் நொபெல் அமைதி விருது - பாகம் 1


ஏப்.15,2015. எகிப்திய முன்னாள் அரசுத்தலைவராகிய Muhammad Anwar al-Sadat, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் Menachem Begin ஆகிய இருவரும் 1978ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டனர். எகிப்தின் அரசுத்தலைவராக இருந்த Anwar al-Sadat, 1977ம் ஆண்டில் எருசலேமுக்குத் துணிச்சலுடன் பயணம் மேற்கொண்டு, இஸ்ரேல் ஆக்ரமித்திருந்த சீனாய் தீபகற்பத்தை மீட்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் எகிப்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் உருவானது.  இதற்காக Anwar al-Sadat, Menachem Begin ஆகிய இருவருக்கும் 1978ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. காம்ப் டேவிட் ஒப்பந்தங்கள் எனப்படும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு முன்னாள் அரசுத்தலைவர் ஜிம்மி கார்ட்டர் அவர்கள் இடைநிலை வகித்தார். Muhammad Anwar El Sadat அவர்கள், 1970ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி முதல், 1981ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி அடிப்படைவாத இராணுவ அதிகாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்படும்வரை எகிப்து நாட்டின் மூன்றாவது அரசுத்தலைவராகப் பணியாற்றியவர். இஸ்ரேலுடன் ஒப்புரவாக இவர் கையாண்ட கொள்கை மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் இவர் கொண்டிருந்த நெருங்கிய உறவு, இவையிரண்டையும் எதிர்த்த இராணுவ அதிகாரிகளால் இவர் கொல்லப்பட்டார்.

இராணுவப் பயிற்சிப் பெற்றிருந்த Anwar al-Sadat அவர்கள், இரண்டாம் உலகப் போரில் எகிப்தில் பிரித்தானிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போரிட்டார். இதனால் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். போருக்குப் பின்னர், Gamal Abdel Nasser தலைமையில், 1952ம் ஆண்டு எகிப்தியப் புரட்சியில் ஈடுபட்டு, ஆங்கிலேயருக்கு ஆதரவாகச் செயல்பட்ட அரசர் Faroukஐ வீழ்த்த உதவினார் Anwar al-Sadat. 1967ம் ஆண்டில் நடந்த ஆறுநாள் சண்டையில் இஸ்ரேல் எகிப்தைத் தோற்கடித்தது. 1970ம் ஆண்டில் நாசர் இறந்தார். எகிப்திய அரசுத்தலைவரான Gamal Abdel Nasserக்கு மிக நெருங்கிய நம்பிக்கைக்குரிய அதிகாரியாகவும் இருந்து, இவருக்குக்கீழ் இருமுறை உதவி அரசுத்தலைவராகவும் பணியாற்றிய Sadat, Nasserக்குப் பின்னர், 1970ம் ஆண்டில் அரசுத்தலைவராகவும் பணியில் அமர்ந்தவர். இவர் அரசுத்தலைவராகப் பணியாற்றிய 11 ஆண்டுகளில் எகிப்தின் அரசியல் மற்றும் பொருளாதார போக்கையே மாற்றினார். பல கட்சி அமைப்பை மீண்டும் நாட்டில் உருவாக்கி, Infitah பொருளாதாரக் கொள்கையையும் கொண்டுவந்தார். இஸ்ரேலுடன் 1973ம் ஆண்டு அக்டோபரில் நடத்திய Yom Kippur போரைத் தொடர்ந்துவந்த ஆண்டுகளில் தனியார் முதலீடுகளுக்குக் கதவைத் திறந்தார் Anwar Sadat. இவரின் இந்தப் பொருளாதாரக் கொள்கையே Infitāḥ அதாவது "தாராளம்" என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் எகிப்து, சோவியத் யூனியனுடன் நீண்டகாலமாகக் கொண்டிருந்த உறவைத் துண்டித்து அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் உறவை இவர் வலுப்படுத்தினார். இதன்மூலம், போரில் இஸ்ரேலிடம் தோற்ற நிலப்பகுதிகளை மீண்டும் பெறுவதற்கு அமெரிக்காவின் ஆதரவை நாடினார்.

Anwar Sadat அவர்களின் இந்த அணுகுமுறையை எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பும், இடதுசாரி அமைப்புகளும் கடுமையாய் எதிர்த்தன. பாலஸ்தீனியர்க்குத் தனிநாடு கோரும் முயற்சியை இவர் கைவிட்டார் என்று, சூடானைத் தவிர பிற அரபு நாடுகளும், பாலஸ்தீனிய விடுதலை நிறுவனமும் எதிர்த்தன. இதனால் 1979ம் ஆண்டுமுதல் 1989ம் ஆண்டுவரை எகிப்து, அரபு கூட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டது. Anwar Sadat அவர்கள் இஸ்ரேலுடன் ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தமே இவர் கொலைசெய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 1918ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த Anwar Sadat அவர்களின் உடன்பிறப்புகள் 13 பேர். விமான ஓட்டுனராகிய இவரின் சகோதரர் Atef Sadat 1973ம் ஆண்டின் போரில் கொல்லப்பட்டார். இவரது தந்தை Anwar Mohammed El Sadat, எகிப்து நாட்டையும், தாய்  Sit Al-Berain சூடான் நாட்டையும் சேர்ந்வர்கள். இதனால் இவரது நிறம் கொஞ்சம் கருப்பாக இருந்ததால் ஏளனமாகவும் இவர் பேசப்பட்டார். இவரது பாட்டி அவர் காலத்து அரசியல் பற்றியும், பிரித்தானிய ஆதிக்கம் பற்றியும் சிறு வயதிலேயே இவருக்கு நன்கு விளக்கியிருந்தார். அதோடு, துருக்கி நாட்டு தேசத்தந்தை Mustafa Kemal Atatürk அவர்களின் பல சமுதாயச் சீர்திருத்தங்கள், வெளிநாட்டுத் தாக்கத்தை அவர் எதிர்த்தது  போன்ற அவரின் வாழ்வாலும் இவர் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

அதோடு, Anwar Sadat அவர்கள், மகாத்மா காந்திஜியை தான் பின்பற்றும் நபராக வைத்திருந்தார். அநீதிகளை எதிர்கொள்ளும்போது வன்முறையற்ற வழிகளில் காந்திஜி கொண்டிருந்த நம்பிக்கை Anwar Sadat அவர்களை மிகவும் கவர்ந்தது. அதேசமயம், எகிப்து பிரித்தானியாவின் கீழ் இருந்தநேரத்தில், பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தலாக ஜெர்மனியின் ஹிட்லர் விரைவாகக் கையாண்ட யுக்திகளைக் கண்டு வியந்தார் Anwar Sadat. மனஉறுதிகொண்ட இராணுவ வீரராகவும், அரசுத்தலைவராகவும் பணியாற்றிய இவரின் அடக்கச்சடங்கில் உலகெங்கிலுமிருந்து பெருமளவான தலைவர்கள் கலந்துகொண்டனர். Gerald Ford, Jimmy Carter, Richard Nixon ஆகிய மூன்று அமெரிக்க அரசுத்தலைவர்கள் கலந்துகொண்டனர். அரபு உலகத்திலிருந்து சூடான் அரசுத்தலைவர்  Gaafar Nimeiry மட்டும் கலந்துகொண்டார்.

அமைதிக்காக உழைப்பவர் பலர் கொல்லப்படுவது வரலாற்று நிகழ்வாக இருந்து வருகிறது. ஆனாலும் அமைதிக்காக பல ஆர்வலர்கள் தொடர்ந்து உழைத்து வருகிறார்கள் என்பதும் உண்மை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.