2015-04-14 15:51:00

போகோ ஹராம் வன்முறையால் 8 இலட்சம் சிறார்க்கு வீடில்லை


ஏப்.14,2015. நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே இடம்பெற்றுவரும் வன்முறையால், குறைந்தது எட்டு இலட்சம் சிறார் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள்ளனர் என்று யூனிசெப்  வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

நைஜீரியாவின் Chibokலிருந்து 200க்கு மேற்பட்ட சிறுமிகள் கடத்தப்பட்ட ஓராண்டு நிறைவு நாள் இச்செவ்வாயன்று நினைவுகூரப்பட்டவேளை, இதை முன்னிட்டு இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது, ஐ.நா.வின் குழந்தைநல நிதி நிறுவனமான யூனிசெப்.

நைஜீரியாவுக்குள் புலம் பெயர்ந்துள்ள அல்லது அதன் எல்லைகளிலுள்ள சாட், நைஜர், காமரூன் ஆகிய நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள சிறாரின் எண்ணிக்கை ஓராண்டுக்குள் இரு மடங்காகி உள்ளது எனவும் கூறியுள்ளது யூனிசெப்.

இதற்கிடையே, ஓராண்டுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிறுமிகளையும், இன்னும் பிடித்துவைத்துள்ள சிறாரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு, ஐ.நா. நிறுவனமும், ஆப்ரிக்க மனித உரிமை வல்லுனர்களும் போகோ ஹராம் அமைப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 2007ம் ஆண்டிலிருந்து நைஜீரியாவில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை எட்டு இலட்சத்திலிருந்து 10.5 இலட்சமாக அதிகரித்துள்ளது என்றும் யூனிசெப் அறிக்கை கூறுகின்றது.

2014ம் ஆண்டு இறுதியின் நிலவரப்படி, நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் சேதமாக்கப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. குறைந்தது 196 ஆசிரியர்களும், 314 பள்ளிச் சிறாரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. கூறுகிறது.

2014ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி Chibok கிராம நடுத்தரப் பள்ளியிலிருந்து 276 சிறுமிகள்  போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். இவர்களில் 57 சிறுமிகள் தப்பித்துவிட்டனர். கடத்தப்படும் இளம்பெண்களும் சிறுமிகளும் கட்டாயத் திருமணம், கட்டாயத் தொழில், பாலியல் வன்கொடுமை போன்றவற்றுக்கு உள்ளாகின்றனர். அதேநேரம், மாணவர்களும் ஆசிரியர்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

நைஜீரியாவில் 2009ம் ஆண்டு முதல் ஆதிக்கம் செலுத்திவரும் போகோ ஹராம் தீவிரவாதிகள், இதுவரை நூற்றுக்கணக்கானோரைப் படுகொலை செய்துள்ளனர்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.