2015-04-14 15:42:00

திருத்தந்தையின் சொற்கள் மனித சமுதாயத்தின் மனச்சான்று


ஏப்.14,2015. ஆர்மேனிய இனப்படுகொலை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளிப்படுத்திய வார்த்தைகள், மனித சமுதாயத்தின் மனச்சான்றை வெளிப்படுத்துவதாக உள்ளதே தவிர, அவை யாருக்கும் எதிரானவை அல்ல என்று ஆர்மேனிய முதுபெரும் தந்தை 19ம் Nerses Bedros அவர்கள் தெரிவித்தார்.

ஆர்மேனிய இனப்படுகொலை இடம்பெற்றதன் நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு  கடந்த ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இனப்படுகொலை, இருபதாம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை என்று குறிப்பிட்டார்.

திருத்தந்தையின் இக்கூற்றுக்கு துருக்கி வெளியுறுவுத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி தனது கருத்தை வெளியிட்ட ஆர்மேனிய கத்தோலிக்கரின் சிலிசியா முதுபெரும் தந்தை 19ம் Nerses Bedros அவர்கள், ஆர்மேனிய இனப்படுகொலை குறித்துப் பேசுவதைத் தடுப்பதற்கு துருக்கி அரசு கையாளும் யுக்தி தோல்வியடைந்துள்ளது என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பலியில் கலந்துகொண்ட சில துருக்கி செய்தியாளர்கள், திருத்தந்தை உரைத்தவுடனே பசிலிக்காவைவிட்டு வெளியேறி திருத்தந்தையின் உரை குறித்து துருக்கி அரசுக்கு அறிவித்தனர் என்றும், துருக்கியில் உடனடியாக அதிகாரப்பூர்வ எதிர்ப்பு வெளிப்பட்டது என்றும் தெரிவித்தார் முதுபெரும் தந்தை Bedros.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆர்மேனியர்களுடன் சேர்ந்துகொண்டு துருக்கிக்கு எதிராகப் பேசவில்லை என்றும், திருத்தந்தை யாருக்கும் எதிராக இல்லை என்றும் கூறினார் முதுபெரும் தந்தை Bedros.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1915ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி துருக்கி ஒட்டமான் பேரரசின்கீழ் ஏறக்குறைய 15 இலட்சம் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை “மாபெரும் குற்றம்” என ஆர்மேனியர்கள் பெயரிட்டுள்ளனர். ஆயினும், முதலாம் உலகப் போரால் தூண்டப்பட்ட, உள்நாட்டு மோதல்களின் ஒரு பகுதியே இந்த இறப்புகள் என்று துருக்கி நாடு கூறி வருகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.