2015-04-14 15:24:00

செல்வத்தைக் குவித்து வைக்காமல் சேவைக்குப் பயன்படுத்துங்கள்


ஏப்.14,2015. தூய ஆவியாரால் மறுபிறப்படைந்த ஒரு சமூகம், நல்லிணக்கத்தைத் தேடும் மற்றும் துன்பங்களில் பொறுமை காக்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாய் காலை, சாந்தா மார்த்தா இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி மறையுரையில் கூறினார்.

முதல் கிறிஸ்தவ சமூகத்தின் வாழ்வு பற்றிக் கூறும் இச்செவ்வாய்த் திருப்பலியின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் செல்வத்தைக் குவித்து வைக்கக் கூடாது, ஆனால், திருத்தூதர்களால் வழிநடத்தப்பட்ட முதல் கிறிஸ்தவ சமூகம் செய்தது போன்று, அச்செல்வத்தைத் தேவையில் இருப்பவருக்கு உதவுவதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒரு சமூகத்தில் தூய ஆவியார் எத்தகைய கனிகளைக் கொண்டு வருகிறார் என்ற கேள்வியை முன்வைத்த திருத்தந்தை, நல்லிணக்கமும் பொது நலனுமே தூய ஆவியாரால் மறுபிறப்படைந்த ஒரு சமூகத்தின் அடையாளங்கள் என்றும் கூறினார்.

தூய ஆவியாரால் பிறந்த அல்லது மறுபிறப்படைந்த ஒரு சமூக உறுப்பினர்கள் ஒன்றிப்பு மற்றும் நல்லிணக்க வரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், அடுத்து அவர்களிடம் பொதுநலன் பண்பு வெளிப்படும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாஸ்கா காலத்தின் இந்த 2ம் வாரத்தில் உயிர்ப்புப் பேருண்மைகளைத் தியானிக்கும் நாம், நம் பங்குச் சமூகங்களை, நம் மறைமாவட்டங்களை, நம் குடும்பத்தை, மற்றவர்களை நினைத்துப் பார்ப்போம், தூய ஆவியாரின் வரமாகிய, அனைவரோடும் நல்லிணக்க ஒன்றிப்போடு வாழும் அருளை மன்றாடுவோம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.