2015-04-14 15:46:00

சகாய அன்னைமரியா பக்தியின் 150ம் ஆண்டு


ஏப்.14,2015. சகாய அன்னைமரியா பக்தியைப் பரப்பும் பணி, உலக மீட்பர் துறவு சபையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 150ம் ஆண்டு நிறைவு விழா வருகிற ஜூன் 27ம் தேதி உலகெங்கும் ஆரம்பமாக உள்ளது.

சகாய அன்னைமரியா பக்தியை உலகெங்கும் பரப்பும் பணியை, திருத்தந்தை 9ம் பத்திநாதர் அவர்கள், 1866ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி உலக மீட்பர் துறவு சபையினரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வின் 150ம் ஆண்டு நிறைவு விழா, 2015ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி உலகெங்கும் தொடங்கி, 2016ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி நிறைவடையும்.

சகாய அன்னைமரியா திருவுருவப் படம், ஏறக்குறைய 1500ம் ஆண்டில் Creteயிலிருந்து உரோம் நகருக்கு வந்தது. ஏறக்குறைய 300 ஆண்டுகள் உரோம் புனித மத்தேயு ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. 1798ம் ஆண்டில் நெப்போலியன் படைகள் உரோம் வந்தபோது புனித மத்தேயு ஆலயம் அழிக்கப்பட்டது. பின்னர் இப்படம் அகுஸ்தீன் சபை அருள்பணியாளர்கள் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு அது பற்றிய நினைவே இல்லாமல் போய்விட்டது. 1855ம் ஆண்டில், உலக மீட்பர் துறவு சபையினர், சபைத் தலைமையகம் கட்டுவதற்காக, புனித மத்தேயு ஆலயம் இருந்த இடத்தை விலைக்கு வாங்கினர். அந்த இடத்தில் சகாய அன்னைமரியா புதுமைப் படம் இருந்ததை பலர் நினைவுகூர்ந்தனர். 1865ம் ஆண்டில் இப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சபையினர் திருத்தந்தையிடம் கேட்டுக்கொண்டதன்பேரில் 1866ம் ஆண்டில் இச்சபையிடம் இப்படம் ஒப்படைக்கப்பட்டது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.