2015-04-13 16:12:00

வாக்களிப்பது கிறிஸ்தவக் கடமை, ஸ்காட்லாந்து ஆயர்கள்


ஏப்.13,2015. நாட்டின் பொதுத்தேர்தலில் வாக்களிக்கவேண்டியது மக்களின் சமூகக்கடமை மட்டுமல்ல, கிறிஸ்தவ ஒழுக்கரீதி சார்ந்த கட்டாயமுமாகும் என உரைத்துள்ளனர் ஸ்காட்லாந்து ஆயர்கள்.

மேமாதம் 7ம் தேதி ஸ்காட்லாந்தில் இடம்பெற உள்ள தேர்தல் குறித்து மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர்கள்,  கிறிஸ்தவ மதிப்பீடுகளால் வழிநடத்தப்பட்டு, சட்டங்களைக்கொண்டுள்ள இந்நாட்டில் நாட்டு நலனை மனதில்கொண்டு செயல்படும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர்.

ஒவ்வொரு வேட்பாளரின் ஒழுக்கரீதி மதிப்பீடுகள் குறித்து அலசி ஆராய்ந்து, வாக்குகளை அவர்களுக்கு வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள  ஆயர்கள், அதற்கென சில விதிகளையும் வகுத்துள்ளனர்.

அரசியலின் இதயமாக மனிதர்களின் மாண்பும் மதிப்பீடுகளும் இருக்கவேண்டும், குடும்பத்திற்கான முக்கியத்துவம், மனித மாண்புக்கு முக்கியத்துவம் வழங்கும் பொருளாதாரம், மனிதகுல விடுதலை, அமைதிக்காக உழைத்தல், நற்செய்தி மதிப்பீடுகளை வாழவைத்தல் போன்றவற்றை, தங்கள் மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில் கோடிட்டுக்காட்டியுள்ளனர் ஸ்காட்லாந்து ஆயர்கள்.

ஆதாரம்: thetablet /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.