2015-04-13 16:02:00

கடவுளின் அருகாமை குறித்த அடையாளங்களை வழங்க அழைப்புப் பெற்றுள்ளது திருஅவை


ஏப்.13,2015. மிகப்பெரும் வரலாற்று மாற்றங்களைக் கண்டுவரும் திருஅவை, இன்றைய உலகிற்கு கடவுளின் பிரசன்னத்தையும், அருகாமையையும்  குறித்த வெளிப்படையான அடையாளங்களை வழங்க அழைப்புப் பெற்றுள்ளது என இறை இரக்க ஜூபிலி ஆண்டை தான் அறிவித்துள்ளதற்கான காரணத்தை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் மாதம் 8ம் தேதி துவக்கப்பட உள்ள இறை இரக்க ஜூபிலி ஆண்டு குறித்த ஆணையை சனிக்கிழமை மாலை வெளியிட்ட திருவழிபாட்டுச்சடங்கில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைத்தந்தையின் இரக்கத்தின் அடையாளமாகவும் கருவியாகவும் விளங்கும்படி இயேசுகிறிஸ்துவால் உயிர்ப்பு நாளன்று ஒப்படைக்கப்பட்ட பணியின் பொருளை மீண்டும் கண்டுகொள்ள உதவுவதாக, இந்த ஜூபிலி ஆண்டு இருக்கும் என்றார்.

இறை இரக்கத்தின் உதவியுடன் மக்களின் காயங்களைக் குணப்படுத்தும் இக்காலம், அனைவருக்கும் மன்னிப்பையும் ஒப்புரவையும் வழங்கும் காலமாக விளங்கட்டும் எனவும் கூறினார் திருத்தந்தை.

உயிர்த்த இயேசு சீடர்களூக்குத் தோன்றியபோது, 'உங்களூக்கு அமைதி உரித்தாகுக'  என உரைத்ததை எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று கிறிஸ்தவர்கள் என்ற பெயரைக் கொண்டிருக்கும் ஒரே காரணத்திற்காக சித்ரவதைகளையும், பாகுபாட்டு நிலைகளையும், மரணத்தையும் எதிர்நோக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த அமைதியின் ஏக்கம் நிறைந்துள்ளது என்று மேலும் கூறினார்.

இந்தத் திருவழிபாட்டின்போது, ஜூபிலி குறித்த ஆணையின் பிரதிகளை, உரோம் நகரின் நான்கு பசிலிக்காப் பேராலயங்களின் தலைமைக்குருக்களான கர்தினால்களுக்கும், உலகின் ஆயர்களுக்கான பிரதிகளை, அங்கு குழுமியிருந்த பல்வேறு பிரதிநிதிகள் வழியாகவும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.