2015-04-13 15:58:00

இயேசுவின் காயங்களில் காணப்படும் இறை இரக்கம்


ஏப்.13,2015. கடவுளது கருணைநிறை அன்பின் அளவற்ற வளங்களை வாரி வழங்கும் காலமாக இந்த ஜூபிலி ஆண்டு இருக்கும் என இஞ்ஞாயிறு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

தான் உயிர்த்தபின் சீடர்களுக்குத் தோன்றிய இயேசு, தன் சீடருள் ஒருவரான தோமாவை நோக்கி, தன் விலாக்காயங்களில் விரலை விடச் சொன்னதை விவரிக்கும் இஞ்ஞாயிறு வாசகத்தை மையமாகக் கொண்டு தன் கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை.

புனித தோமா, எதையும் எளிதில் நம்புபவர் அல்ல, தானே சோதித்துப் பார்த்து அதில் அனுபவம் பெற விரும்புவர் என்பதால், இயேசுவும் அவருக்காக பொறுமையுடன் காத்திருந்தார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறை இரக்கத்தின் ஞாயிறான இஞ்ஞாயிறன்று, அனைத்துப் பாவங்களையும் தீமைகளையும் வெற்றிகண்ட இயேசுவின் காயங்களில் காணப்படும் இறை இரக்கத்தைக் குறித்து தியானிப்போம் என்ற அழைப்பையும் விடுத்தார் திருத்தந்தை.

கண்ணால் காணாமலேயே விசுவசிப்போர் பேறுபெற்றோர் என உரைத்த இயேசுவே, சந்தேகம் கொண்டிருந்த தன் சீடரை நெருங்கிவந்து, தன் காயங்களைக் காண்பித்தார், அதன்வழி புனித தோமாவும் தன் காயங்களாக கண்ணீரையும் தாழ்ச்சியையும் வெளிப்படுத்தினார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் இரக்கத்தையும் கருணையுடன் கூடிய பொறுமையையும் நேரடியாக சந்தித்தபோது, புனித தோமா, உயிர்ப்பின் பொருள்புரிந்து, உள்மனமாற்றம் பெற்றார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் மீது முழுமையான விசுவாசம் கொண்டு அவரை நோக்கி, 'என் ஆண்டவரே, என் கடவுளே' என புனித தோமா அறிக்கையிட்டது, மிகவும் அழகு நிரம்பிய வெளிப்பாடு என்றார்.

நாம் இவ்வாண்டின் இறுதி மாதத்தில் துவக்கவிருக்கும் ஜூபிலி ஆண்டு, கடவுளின் கருணைநிறை அன்பின் அளவற்ற வளங்களை வாரி வழங்கும் காலமாக இருக்கும் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு, கிறிஸ்து உயிர்ப்பு தினத்தைக் கொண்டாடிய கீழைவழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.