2015-04-11 15:47:00

பயிற்சியாளர்களிடம் திருத்தந்தை – சான்றாக வாழுங்கள்


ஏப்.11,2015. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுக்குப் பயிற்சியளிப்பவர்கள், இளையோருக்கென பெரிய இதயத்தைக் கொண்டு, கருணையாலும், கனிவாலும் முழுவதும் நிறைக்கப்பட்ட மற்றும் எல்லாருக்கும் இடமளிக்கும் பெரிய இதயங்களை இளையோரில் உருவாக்கும் பண்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாங்கள் பயிற்சியளிக்கும் இளையோரிடம் உண்மையான நண்பர்களாகவும், தோழர்களாகவும் இருப்பது மட்டுமல்ல, பரந்த இதயத்துடன், ஓர் உண்மையான தந்தையாக, தாயாக இருந்து எவ்வளவுக்கு அதிகமாக அன்பை வழங்க முடியுமோ அவ்வளவுக்கு அதிகமாக அவர்களுக்கு வழங்குமாறும் பயிற்சியாளர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கால இளையோர் மனத்தாராளமற்றவர்கள், சாதாரண திறமையுடையவர்கள் என்பது உண்மையல்ல என்றும், பெறுவதைவிட கொடுப்பதிலே அதிகம் ஆசிர்வதிக்கப்படுகின்றனர் என்பதை இளையோர் அனுபவிப்பதற்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்றும் கூறினார் திருத்தந்தை.

தற்போது திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டையொட்டி, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுப் பயிற்சியாளர்களுக்கு உரோம் நகரில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏறக்குறைய 1400 பேரை  இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இக்காலத்தில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்துகொள்பவரின் எண்ணிக்கை குறைந்துவருவது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த வாழ்வின் அழகை தங்களின் சான்று வாழ்வு மூலம் வெளிப்படுத்தும்போது இவ்வாழ்வுக்கான அழைத்தல்கள் குறையாது என்பதில் தான் உறுதியாய் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு, திருஅவையின் மிக விலைமதிப்பற்ற சொத்துக்களில் ஒன்று என்றும், இயேசு கிறிஸ்துவின் அன்பை மூலை முடுக்கெல்லாம் சென்று அறிவிப்பதற்கு இளையோருக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 7, இச்செவ்வாய் மாலை ஆரம்பமான இக்கருத்தரங்கு, ஏப்ரல் 11, இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.