2015-04-11 16:25:00

தாய்லாந்து நாட்டுக்கு தேசிய ஒப்புரவு அவசியம்


ஏப்.11,2015. கடந்த பத்து ஆண்டுகளாக, வன்முறைகளோடு அரசியல் மோதல்களை அனுபவித்துவரும் தாய்லாந்து நாட்டுக்கு தேசிய ஒப்புரவு அவசியம் என்று பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் கூறப்பட்டது.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த ஐந்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய தாய்லாந்து ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு இயக்குனரும் செயலரும் இவ்வாறு தெரிவித்தனர்.

தாய்லாந்தில் அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையே, அரசுக்கும் மக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்து மனித உயிர்களும் சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதையும் குறிப்பிட்ட அத்தலைவர்கள், அந்நாட்டில் கடந்த காலங்களில் இரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடத்தப்பட்டபோது இடம்பெற்ற அழிவுகளையும் எடுத்துரைத்தனர்.

மீன்பிடித் தொழிற்சாலைகளில் இடம்பெறும் நவீன அடிமைமுறை, மனித வர்த்தகத்தில் மனிதர் பயன்படுத்தப்படல், குடியேற்றதாரர் பிரச்சனை போன்ற விவகாரங்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படுமாறும் இத்தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆசியச் சூழலில் அமைதியும் ஒப்புரவும்" என்ற தலைப்பில் இம்மாதம் 7ம் தேதி தொடங்கிய இக்கருத்தரங்கில், ஹாங்காக், இந்தியா, சீனா, மியான்மார் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த 43 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தாய்லாந்தில் ஏறக்குறைய 95 விழுக்காட்டினர் புத்த மதத்தினர். ஏறக்குறைய 3 விழுக்காட்டினர்  முஸ்லிம்கள். ஏறக்குறைய 0.5 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.