2015-04-11 16:10:00

இரக்கத்தின் புனித ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு


ஏப்.11,2015. இறைஇரக்கத்தின் ஞாயிறின் திருவிழிப்பான ஏப்ரல் 11, இச்சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய புனிதக் கதவின்முன் நின்று பாப்பிறையின் ‘ஆணை அறிக்கை’(Bull of Indiction) வாசிக்கப்பட்டு இரக்கத்தின் புனித ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

இந்தச் சிறப்பு ஜூபிலி ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் மாலை திருவழிபாட்டை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றுகிறார்.

ஜூபிலி ஆண்டு போன்ற சிறப்பான காலங்களில் பாப்பிறையின் ‘ஆணை அறிக்கை’மூலம் அக்காலங்கள் அறிவிக்கப்படுகின்றன.

1965ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் நிறைவுற்றதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நாளான 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இரக்கத்தின் புனித ஆண்டு தொடங்கும். இந்த ஜூபிலி ஆண்டு, 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதிவரை சிறப்பிக்கப்படும். “உங்கள் வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள் (லூக்.6,36)” என்ற விவிலிய திருச்சொற்கள், இந்த ஜூபிலி புனித ஆண்டின் தலைப்பாகும்.

கத்தோலிக்கத் திருஅவையில் 1300ம் ஆண்டில் திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள் புனித ஆண்டை அறிவித்தார். பின்னர், ஒவ்வொரு தலைமுறையும் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது ஜூபிலி ஆண்டின் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1475ம் ஆண்டிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித ஜூபிலி ஆண்டு திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை திருஅவையில் 26 ஜூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. இறுதியாக இரண்டாயிரமாம் ஆண்டில் நடைபெற்றது. அரசியல் பிரச்சனைகள் காரணமாக 1800 மற்றும் 1850ம் ஆண்டுகளில் ஜூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்படவில்லை. இதுவரை இரண்டு சிறப்பு ஜூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துவின் மீட்பின் 1900மாம் ஆண்டையொட்டி, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1933ம் ஆண்டிலும், மீட்பின் 1950ம் ஆண்டையொட்டி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் 1983ம் ஆண்டிலும் சிறப்பு ஜூபிலி ஆண்டை அறிவித்தனர். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 13, 2015 அன்று இரக்கத்தின் புனித ஆண்டு என்ற சிறப்பு ஜூபிலி ஆண்டு குறித்து அறிவித்தார். இந்த சிறப்பு ஆண்டு ஏப்ரல் 11, இச்சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.