2015-04-11 16:20:00

அணுஆயுதங்களை ஒழிப்பதற்கு உலகினருக்குத் தார்மீகக் கடமை உள்ளது


ஏப்.11,2015. அணு ஆயுதங்கள் ஏற்படுத்தும் எண்ணிக்கைக்குள் அடங்காத மற்றும் பாகுபாடற்ற மனிதமற்ற விளைவுகள், இந்த ஆயுதப் பயன்பாடுகள் அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிராக உள்ளன என்பதை தெளிவாகக் காட்டுகின்றன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் தொடங்கி, அனைத்துத் திருத்தந்தையர்களும் அணுஆயுத ஒழிப்புக்கு முன்வைத்துவரும் உருக்கமான விண்ணப்பங்களைக் குறிப்பிட்டுப் பேசிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள், மனித மனச்சான்றுகளைத் தட்டி எழுப்பி அமைதிக்கு வழி வகுக்க வேண்டுமென திருத்தந்தையர் விரும்புகின்றனர் என்று கூறினார்.

“அணு ஆயுதங்களும், தார்மீகக் கடமைகளும்” என்ற தலைப்பில் நியுயார்க்கில் ஐ.நா. கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்த பேராயர் Auza அவர்கள், அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தங்கள், சட்டமுறைப்படி மட்டும் நிறைவேற்றப்பட வேண்டியவை அல்ல, ஆனால் அவைகளை நிறைவேற்ற நன்னெறிக் கடமை உள்ளது என்பதையும் உலகினருக்கு நினைவுபடுத்தினார்.

அமைதியும், அனைத்துலக உறுதியான தன்மையும் ஒருவரையொருவர் அழிப்பதற்கு உறுதியளிப்பதாலோ அல்லது முழுவதுமாக அழிப்பதற்கு அச்சுறுத்தல் விடுப்பதாலோ வருவதல்ல என்றுரைத்த அவர், பகைவர்களுக்கு இடையே அதிகாரத்தைச் சமமாகக் காப்பதால் அமைதி ஏற்படும் என்று கணிக்கக் கூடாது என்றும் கூறினார்.

இக்கருத்தரங்கில் எட்டு மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், பல்சமய நிறுவனப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.